மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி 3 தொழிலாளிகளுக்கு சிறை தண்டனை
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 3 தொழிலாளிகளுக்கு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர்,
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தையல் குணாம்பட்டினத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 32). அதே ஊரைச் சேர்ந்தவர்கள் குமார் என்ற செந்தில்குமார்(40), வைரமுத்து(26). கூலித்தொழிலாளிகளான இவர்கள் 3 பேரும் அங்குள்ள பால்வாடி அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது பால்வாடியில் சத்துமாவு வாங்குவதற்காக வந்த 10-ம் வகுப்பு மாணவியிடம், ரெங்கநாத புரத்தைச் சேர்ந்த ஒருவர் பேசினார். அதனை பார்த்த 3 பேரும் அந்த மாணவியிடம் நீ, அவரிடம் மட்டும் தான் பேசுவாயா?, எங்களிடம் பேச மாட்டாயா? என்று கேட்டு ஆபாசமான வார்த்தைகளை கூறி அவளை திட்டினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி, அவர்களை திட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். உடனே அவர்கள் 3 பேரும் மாணவியை பின்தொடர்ந்து சென்று, மானபங்கப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதில் மாணவியின் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையில் மயக்கமடைந்தார். இதனால் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் கடந்த 27.5.2016 அன்று நடந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில், குற்றவாளி மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12 ஆயிரம் ரூபாய் அபராதமும், செந்தில்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 ஆயிரம் ரூபாய் அபராதமும், வைரமுத்துவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி லிங்கேஸ்வரன் நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் க.செல்வப்ரியா ஆஜராகி வாதாடினார்
Related Tags :
Next Story