குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்
ராமநத்தம் அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே உள்ள வடகராம்பூண்டி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், ஊராட்சி செயலாளரிடமும் கிராம மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் காலி குடங்களுடன் நேற்று காலை ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு திரண்டு சென்றனர். பின்னர் அவர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் வட்ட செயலாளர் பாண்டியன், வட்ட தலைவர் மூர்த்தி, பொருளாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முறையாக குடிநீர் வினியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தெருக்களில் கருப்பு கொடி கட்டியிருந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசாரும், மங்களூர் ஊராட்சி ஒன்றிய பணி பார்வையாளரும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள், தங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால், நாங்கள் நீண்ட தொலைவில் உள்ள விளை நிலங்களுக்கு சென்று தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் உடனே குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறினர்.
அதற்கு போலீசார், குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story