இறந்து 1 வாரம் ஆகியும் குட்டியானையை புதைத்த இடத்தில் சோகத்துடன் வந்து நிற்கும் தாய் யானை பவானிசாகர் அருகே நெகிழவைக்கும் சம்பவம்


இறந்து 1 வாரம் ஆகியும் குட்டியானையை புதைத்த இடத்தில் சோகத்துடன் வந்து நிற்கும் தாய் யானை பவானிசாகர் அருகே நெகிழவைக்கும் சம்பவம்
x
தினத்தந்தி 1 Feb 2019 4:00 AM IST (Updated: 1 Feb 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே இறந்து 1 வாரம் ஆகியும் குட்டி யானை புதைக்கப்பட்ட இடத்தில் சோகத்துடன் தாய் யானை வந்து நிற்கிறது.

புஞ்சைபுளியம்பட்டி,

நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் வனவிலங்குகள் அடிக்கடி தண்ணீரை தேடி பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்து செல்கின்றன. அதன்படி கடந்த ஒருவாரத்துக்கு முன்பு தண்ணீரை தேடி 5-க்கும் மேற்பட்ட யானைகள் அணை நீர்த்தேக்கப்பகுதிக்கு வந்தன.

அப்போது தாய் யானையுடன் குட்டி யானை ஒன்றும் வந்தது. யானைகள் தண்ணீர் குடித்துவிட்டு வனப்பகுதியை நோக்கி சென்றன.

அப்போது நீர்த்தேக்க பகுதியில் இருந்து குட்டி யானை கால் இடறி கீழே விழுந்தது. இதனால் அந்த குட்டி யானை இறந்தது. மற்ற யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் அந்த குட்டி யானையை சுற்றி நின்றன.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பவானிசாகர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பட்டாசுவெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டினர். இதைத்தொடர்ந்து அந்த யானைகள் அனைத்தும் காட்டுக்குள் சென்றுவிட்டன. ஆனால் தாய் யானை மட்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் சற்று தொலைவில் நின்று கொண்டு இருந்தது. அதன்பின்னர், இறந்த குட்டி யானையின் உடலை பொக்லைன் எந்திரம் உதவியுடன் வனத்துறையினர் அந்தப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். அப்போது தொலைவில் நின்ற தாய் யானை கண்ணீர் வடித்தபடி பார்த்துக்கொண்டிருந்தது. பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டது.

குட்டியானை இறந்து 1 வாரம் ஆகியும் புதைக்கப்பட்ட இடத்துக்கு தாய் யானை தினமும் வந்து செல்கிறது. மேலும் குட்டி யானை புதைக்கப்பட்ட இடத்தில் கண்ணீர் வடித்தபடி சோகத்துடன் வெகுநேரம் நிற்கிறது. பின்னர் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘குட்டி யானை புதைக்கப்பட்ட இடத்தில் தாய் யானை கண்ணீருடன் தினமும் சுற்றித்திரிகிறது.

இதனால் தாய்ப்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல. ஐந்தறிவு படைத்த விலங்குகளுக்கும் உண்டு என காண்போரை நெகிழ வைக்கிறது. எனவே தாய் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story