பெரியார் பஸ் நிலையம் மூடப்பட்டது, 9 இடங்களில் பஸ் நிறுத்தங்கள்


பெரியார் பஸ் நிலையம் மூடப்பட்டது, 9 இடங்களில் பஸ் நிறுத்தங்கள்
x
தினத்தந்தி 1 Feb 2019 4:15 AM IST (Updated: 1 Feb 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்காக மதுரை பெரியார் பஸ் நிலையம் நேற்று மூடப்பட்டது.

மதுரை, 

மதுரையின் மிகப்பெரும் அடையாளம் பெரியார் பஸ் நிலையம். பாண்டிய மன்னர்கள் காலத்தில் இருந்தே, தற்போது பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள தெற்கு கோட்டை தான் மதுரையின் நுழைவுவாயில். இந்த நுழைவு வாயில் அருகில் பெரிய அகழி இருந்தது. நகரை விரிவாக்கம் செய்வதற்காக இந்த அகழியை அரும்பாடுபட்டு ஆங்கிலேயர்கள் மூடினர். அதன்பின் இந்த இடத்தில் மதுரைக்கு வரும் மாட்டுவண்டி, குதிரை வண்டி போன்ற வண்டிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின், தனியார் நிறுவனங்கள் சார்பில் மதுரையில் பஸ்கள் போக்குவரத்து தொடங்கியது. எனவே இங்கு பஸ்கள் நிறுத்தப்பட்டன. அதன்பின் பஸ்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன.

எனவே 1972-ம் ஆண்டு முதல் பஸ் நிலையம் முழு வடிவம் பெற்றது. மேலும் அதற்கு பெரியார் பஸ் நிலையம் என பெயர் வைக்கப்பட்டது. சுமார் 47 ஆண்டுகள் அரசு பஸ் நிலையமாக சேவை ஆற்றிய பெரியார் பஸ் நிலையம் நேற்று முதல் மூடப்பட்டது.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.156 கோடி செலவில் மதுரை பெரியார் பஸ் நிலையம் சீரமைக்கப்படுகிறது. பெரியார் பஸ் நிலையம் மற்றும் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையம் இணைக்கப்பட்டு நவீன மயமாக்கப்படுகிறது. இந்த பணிகளை 18 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் பெரியார் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்ட பஸ்கள் டி.பி.கே.சாலை, மேலவெளி வீதி, எல்லீஸ் நகர், மகப்பூபாளையம், பழங்காநத்தம் உள்பட 9 இடங்களில் நிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதில் திடீர் திருப்பமாக டி.பி.கே. சாலை மற்றும் மேலவெளி வீதியில் பஸ்களை நிறுத்த போலீசார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெரியார் பஸ் நிலையத்தை சுற்றி எங்கும் பஸ்களை நிறுத்த அனுமதித்தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். எனவே இந்த இடங்களை பஸ்களை நிறுத்தி வைத்து எடுக்காமல், வெறும் பஸ் நிறுத்தமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக மாற்று திட்டத்தையும் போலீசார் தயார் செய்து வருகின்றனர்.

Next Story