துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தேசிய துப்புரவு பணியாளர் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் பேச்சு
துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று தேசிய துப்புரவு பணியாளர் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹர்மானி பேசினார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் துப்புரவு பணியாளர்களுக்கு செய்யப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேசிய துப்புரவு பணியாளர் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹர்மானி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய அரசு துப்புரவு பணியாளர்களுக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. துப்புரவு பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், சுகாதாரம் மற்றும் அவர்களின் பிள்ளைகள் கல்வி வளர்ச்சிக்காகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு 3 பேரும், 2019-ம் ஆண்டு 2 பேரும் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம்செய்யும் போது விஷவாயு தாக்கி இறந்துள்ளனர். இந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்கதாகும்.
இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் திருவள்ளூர் மாவட்டத்தில் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க அனைத்து பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் பார்த்து கொள்ளவேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் கழிவு நீர் தொட்டிகளை கண்டறிந்து அவற்றை முழுவதுமாக இடித்து அகற்ற வேண்டும். அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் மீது கடுமையாள நடவடிக்கை எடுக்கப்படும். துப்புரவு பணியாளர்கள் பணியில் ஈடுபடும்போது அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி பணியில் ஈடுபடுத்தவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் திருவள்ளூரை அடுத்த திருமழிசையில் தனியார் நிறுவனத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், சப்-கலெக்டர் ரத்னா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த திரளான அரசு அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story