போலீஸ் நிலையத்தில் பெண் தாக்கப்பட்ட விவகாரம் மகளை கொல்ல முயன்றதாக தாய் உள்பட 5 பேர் மீது வழக்கு


போலீஸ் நிலையத்தில் பெண் தாக்கப்பட்ட விவகாரம் மகளை கொல்ல முயன்றதாக தாய் உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 1 Feb 2019 3:38 AM IST (Updated: 1 Feb 2019 3:38 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையத்தில் பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் மகளை கொல்ல முயன்றதாக தாய் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.

பெங்களூரு,

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர், தனது மகளுக்கு 11 வயது இருந்தபோதே தன்னுடைய சகோதரருடன் (தாய் மாமா) திருமணம் செய்து வைத்திருந்தார். இதையடு்த்து, தாய் மாமாவுடன் அந்த மைனர் பெண் 6 ஆண்டுகள் குடும்பம் நடத்தினார். சமீபத்தில் தாய் மாமாவுடன் வாழ பிடிக்காமல் மைனர் பெண் பெங்களூருவுக்கு வந்து ஓட்டலில் வேலை செய்தார். இதுபற்றி அறிந்த சரஸ்வதி தனது மகளை ஆந்திராவுக்கு அழைத்து செல்ல கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு வந்திருந்தார். குமாரசாமி லே-அவுட் பகுதியில் உள்ள ஓட்டலில் இருந்து தனது மகளை சரஸ்வதி அழைத்து செல்ல முயன்றபோது தகராறு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் குமாரசாமி லே-அவுட் போலீசார் ஓட்டலுக்கு சென்று சரஸ்வதி, அவரது மகள் மற்றும் உறவினரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்திருந்தனர். அங்கு வைத்து சரஸ்வதியை, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகய்யா தாக்கியதுடன், அவரை பிடித்து கீழே தள்ளினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானது. இதையடுத்து, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகய்யா பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

5 பேர் மீது வழக்கு

இந்த நிலையில், குமாரசாமி லே-அவுட் போலீஸ் நிலையத்தில் சரஸ்வதி உள்ளிட்ட 5 பேர் மீது பாதிக்கப்பட்ட மைனர் பெண் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், தன்னுடைய தாய் மாமாவுடன் கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததுடன், தற்போது அவருடன் சேர்ந்து வாழ மறுப்பதால் தன்னை கொலை செய்ய தாய் சரஸ்வதி உள்ளிட்டோர் முயற்சிப்பதாக புகாரில் மைனர் பெண் கூறியுள்ளார்.

இதையடுத்து, சரஸ்வதி உள்ளிட்ட 5 பேர் மீதும் குமாரசாமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் 5 பேரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து உதவி சப்-இன்ஸ்பெக்டரால் தாக்கப்பட்ட பெண் தற்போது மகள் கொடுத்த புகாரால் கைதாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Next Story