நாடாளுமன்ற தேர்தல் குறித்து மைசூரு மண்டல நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை 6-ந் தேதி பொதுக்குழு கூடும் என தினேஷ் குண்டுராவ் அறிவிப்பு


நாடாளுமன்ற தேர்தல் குறித்து மைசூரு மண்டல நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை 6-ந் தேதி பொதுக்குழு கூடும் என தினேஷ் குண்டுராவ் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2019 10:14 PM GMT (Updated: 31 Jan 2019 10:14 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் குறித்து மைசூரு மண்டல நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். வருகிற 6-ந் தேதி பொதுக்குழு கூடும் என தினேஷ் குண்டுராவ் அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் கால அட்டவணை அடுத்த மாதம் வெளியாகிறது. இந்த தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில் மைசூரு மண்டல நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மைசூரு மண்டலத்தில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பது குறித்தும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய இடங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டணியில் ஹாசன் மற்றும் மண்டியா தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்று அந்த மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

விவாதிக்க வேண்டாம்

மண்டியா தொகுதியில் நடிகர் அம்பரீசின் மனைவியை களம் இறக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்கு தலைவர்கள், கூட்டணி அமைந்தால் மண்டியா தொகுதியை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்க வேண்டிய நிைல ஏற்படும் என்றும், அதனால் தற்ேபாதைக்கு நாமாக சென்று சுமலதாவிடம் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதிக்க வேண்டாம் என்றும் தீர்மானித்தனர் என சொல்லப்படுகிறது.

இந்த கூட்டம் நிறைவடைந்த பிறகு தினேஷ் குண்டுராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நிர்வாகிகள் கூட்டம்

மைசூரு மண்டலம் குறிப்பாக ஹாசன், மண்டியா, துமகூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளின் நிர்வாகிகள் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். தொகுதி பங்கீடு குறித்து ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இன்னும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. நிர்வாகிகள் பேசும்போது, உள்ளூர் அளவில் உள்ள பிரச்சினைகளை கூறினர். அந்த பிரச்சினைகளை சரிசெய்ய நாங்கள் முயற்சி செய்வோம்.

நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினோம்

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். இதன் மூலம் ராகுல் காந்தியை பிரதமராக்குவது எங்களின் இலக்கு. அதன் அடிப்படையில் சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றும்படி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினோம்.

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி நிர்வாகிகள், கூட்டணிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசக்கூடாது என்று எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம். கூட்டணிக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் வகையில் பேச வேண்டாம் என்று கூறி இருக்கிறோம்.

பொதுக்குழு கூட்டம்

அதே போல் ஜனதா தளம்(எஸ்) கட்சியினரும் கூட்டணி குறித்து பகிரங்கமாக விமர்சித்து பேசுவது சரியல்ல. அவர்களும் கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும். எதுவாக இருந்தாலும் கட்சி கூட்டங்களில் பேசும்படி கூறி இருக்கிறோம்.

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் கூட்டு கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளோம். வருகிற 6-ந் தேதி கா்நாடக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்படும்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

Next Story