புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் திரளானவர்கள் பங்கேற்பு


புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் திரளானவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 1 Feb 2019 3:45 AM IST (Updated: 1 Feb 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஓட்டப்பிடாரம்,

தென்னகத்து பதுவை, கோடி அற்புதர் என மக்களால் அழைக்கப்படும் புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இறுதியில் தொடங்கும். இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் கொடி மந்திரிக்கப்பட்டு பின்னர் பவனியாக கொண்டு வந்து கொடியேற்றப்பட்டது. நேற்று மாலையில் நடந்த கொடியேற்றத்தை தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடந்தது.

திருவிழா நாட்களில் தினமும் காலை 6 மணி மற்றும் மாலை 6 மணிக்கு திருப்பலி, மறையுரை, நற்கருனை ஆசீர் நடக்கிறது. திருவிழா சிறப்பு நிகழ்வாக வருகிற 11-ந் தேதி மாலையில் திருப்பலியும், புனித அந்தோணியார் உருவம் தாங்கிய சப்பர பவனியும் நடக்கிறது.

12-ந் தேதி காலை 4.30 மணி முதல் திருப்பலி, 11.30 மணிக்கு பெருவிழா திருப்பலியும் பாளையங்கோட்டை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை திருத்தல பங்குதந்தை மரிய பிரான்சிஸ், உதவி அருட்தந்தைகள் எட்வின் ஆரோக்கியநாதன், சதீஷ்செல்வதயாளன் உள்ளிட்டவர்கள் செய்து வருகிறார்கள்.

கொடியேற்ற நிகழ்ச்சியில், குருமட அதிபர் சேவியர் டெரன்ஸ், பாளையங்கோட்டை மறைமாவட்ட பொருளாளர் மோயீசன், தாளார்குளம் பங்குத்தந்தை சந்தியாகு, உடையார்பட்டி பங்குத்தந்தை ஜோமிக்ஸ், மேல மெஞ்ஞானபுரம் பங்குத்தந்தை குழந்தைராஜ், சிதம்பராபுரம் பங்குத்தந்தை பீட்டர், சங்கர்நகர் பங்குத்தந்தை ஜோசப்ராஜ், காமநாயக்கன்பட்டி அருள்ராஜ், பாளையஞ்செட்டிகுளம் பங்குத்தந்தை அந்தோணிராஜ், சங்கரன்கோவில் பங்குத்தந்தை வர்க்கீஸ், இளையரசனேந்தல் பங்குத்தந்தை வினோத்பால்ராஜ், வெங்கடாசலபுரம் பங்குத்தந்தை வில்சன் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின் பேரில் மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

Next Story