மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால், சிவக்குமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது குமாரசாமி பேச்சு


மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால், சிவக்குமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது குமாரசாமி பேச்சு
x
தினத்தந்தி 31 Jan 2019 10:23 PM GMT (Updated: 31 Jan 2019 10:23 PM GMT)

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால், சிவக்குமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

பெங்களூரு, 

துமகூரு சித்தகங்கா மடத்தில் நேற்று சிவக்குமார சுவாமி மறைந்த 11-ம் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால், சிவக்குமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது கிடைக்கும். அடுத்த 7 மாதங்களில் இந்த முடிவை நாங்கள் எடுப்போம். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எங்களுக்கு பலம் கொடுக்க வேண்டும்.

நான் செய்த புண்ணியம்

சிவக்குமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை எழுப்ப தொடங்கியுள்ளனர். அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்திருந்தால், அந்த விருதுக்கு மேலும் பெருமை கிடைத்திருக்கும். முன்பு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, அவருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டது.

இது நான் செய்த புண்ணியம். சிவக்குமார சுவாமி பெயரில் ஒரு மக்கள் நலத்திட்டம் அமல்படுத்தப்படும். இதுகுறித்து மந்திரிசபையில் விவாதிக்கப்பட்டது. கட்சி பேதங்களை மறந்து அனைத்துக்கட்சியினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளோம்.

விவசாயிகளின் நலன்

இது இந்த மடத்தின் பலம். வெளியில் நாங்கள் அரசியல் ரீதியாக மோதிக்கொள்கிறோம். ஆனால் இந்த மடத்தில் அரசியல் கட்சிகளின் அனைத்து தலைவர்களும் சகோதரர்களை போன்றவர்கள் ஆவார்கள்.

சிவக்குமார சுவாமி விவசாயிகளுக்கு ஆதரவாக பணியாற்றினார். அவர் விவசாயிகளின் நலன் பற்றி அடிக்கடி கேட்பார். மடத்தின் பணிகளுக்கு உதவி செய்யுமாறு அவர் அரசிடம் எந்த கோரிக்கையும் வைத்தது இல்லை.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Next Story