வி.ஐ.டி.யில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கு: நோய்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பேச்சு


வி.ஐ.டி.யில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கு: நோய்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பேச்சு
x
தினத்தந்தி 1 Feb 2019 3:30 AM IST (Updated: 1 Feb 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

நோய்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று வி.ஐ.டி.யில் நடந்த 3 நாள் சர்வதேச கருத்தரங்கில் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

வேலூர், 

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ‘மனித மரபணுக்களில் சுற்றுச்சூழல் மரபணு மாற்றத்தின் தாக்கம்’ என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கு நேற்று தொடங்கியது. வி.ஐ.டி. செயல் இயக்குனர் சந்தியா பென்டாரெட்டி தலைமை தாங்கினார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

வேலூரில் இயங்கி வரும் சி.எம்.சி. மருத்துவமனை, வி.ஐ.டி. பல்கலைக்கழகம் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி ஆகியவை அறிவியல் கல்வியின் மூலம் மக்களுக்கு சேவை செய்து வருகின்றன. ரசாயன மாசுபாடுகள் மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும், புற்று நோய் போன்ற நோய்கள் உருவாக காரணிகளாகவும் உள்ளன. புற்று நோய் மரபு வழியாகவும், ரசாயன மாசுக்களாலும் உண்டாகும் அபாயம் உள்ளது. மாற்று மருத்துவ ஆராய்ச்சி முறைகள் நோய் பரவுவதை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் உதவும். ‘ஸ்டெம்ப் செல்’ மூலம் பல்வேறு நோய்களை தீர்க்க முடியும்.

நோய் பரவாமல் இருப்பது மட்டுமின்றி நோய் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். மேலும் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையிலும் மக்கள், தங்களை உருவாக்கி கொள்ள வேண்டும். தடுப்பு ஊசிகள், போலியோ சொட்டு மருந்து ஆகியவற்றை ஆர்வத்துடன் போட்டுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கருத்தரங்கின் சிறப்பு மலரை வி.ஐ.டி. செயல் இயக்குனர் டாக்டர் சந்தியா பென்டாரெட்டி வெளியிட, அதனை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். இந்திய மரபணு மாற்று காரணி சங்கத்தின் தலைவர் டாக்டர் கே.பி சைனஸ், கைவர் ஜினோமிக்ஸ் நிறுவன தலைமை செயல் அலுவலர் அபிலேஷ் எம்.குணசேகர் ஆகியோரும் பேசினர்.

கருத்தரங்கில், அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழக பேராசிரியர்கள், மரபணு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் பலர் பங்கேற்றனர். மரபணு மாற்றம், புற்று நோய் தெரபி உள்ளிட்டவைகள் குறித்து 50 ஆராய்ச்சி கட்டுரைகள் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

முன்னதாக வி.ஐ.டி. பல்கலைக்கழக உயிரியல் தொழில்நுட்ப பிரிவுத்துறை தலைவர் பிரகாசம் வரவேற்றார். முடிவில் கருத்தரங்கு அமைப்பாளர் பேராசிரியை டாக்டர் ராதா சரஸ்வதி நன்றி கூறினார்.

Next Story