வேலூர் மாவட்டத்தில் பள்ளிக்கு வராத 39 ஆசிரியர்களுக்கு நோட்டீசு அதிகாரிகள் தகவல்
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பள்ளிக்கு வராத 39 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 18 ஆயிரத்து 200 ஆசிரியர்களில் 8,100 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அரசு பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 24-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 8,100 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டது.
இதனிடையே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு உடனடியாக திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். மாவட்டம் முழுவதும் 99 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்.
அதேசமயம் 39 ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வரவில்லை. மேலும் அதுகுறித்து எவ்வித தகவல்களையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. இதையடுத்து 39 ஆசிரியர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு (17பி) அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நேற்று முன்தினம் காலை 10 மணி வரை பணிக்கு வந்த ஆசிரியர்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. அதில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 4 ஆசிரியர்கள் தவிர 39 ஆசிரியர்கள் வராதது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு உரிய விளக்கம் அளிக்காத பட்சத்தில் 39 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்றனர்.
Related Tags :
Next Story