சிவகங்கை மாவட்டத்தில் 11 லட்சத்து 17ஆயிரத்து 666 வாக்காளர்கள் ஆண்களை விட பெண்கள் அதிகம்


சிவகங்கை மாவட்டத்தில் 11 லட்சத்து 17ஆயிரத்து 666 வாக்காளர்கள் ஆண்களை விட பெண்கள் அதிகம்
x
தினத்தந்தி 1 Feb 2019 4:27 AM IST (Updated: 1 Feb 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் 11 லட்சத்து 17 ஆயிரத்து 666 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்களை விட பெண்கள் 12 ஆயிரத்து 910 பேர் அதிகமாக உள்ளனர்.

சிவகங்கை,

வருகிற மே மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சக்திவேல், தேர்தல் பிரிவு தாசில்தார் ரமேஷ் உள்பட அதிகாரிகளும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் அ.தி.மு.க. நகர் செயலாளர் ஆனந்தன், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோபி, தி.மு.க மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் கணேசன், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், தேசியவாத காங்கிரஸ் மாவட்ட தலைவர் பெரோஸ்காந்தி, பா.ஜ.க. நகர தலைவர் தனசேகரன், தே.மு.தி.க. மாவட்ட அவைதலைவர் வக்கீல் ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர்.

தற்போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் 5 லட்சத்து 52 ஆயிரத்து 350 ஆண்களும், 5 லட்சத்து 65 ஆயிரத்து 260 பெண்களும், 56 இதரபிரிவினரையும் சேர்த்து மொத்தம் 11 லட்சத்து 17 ஆயிரத்து 666 பேர் உள்ளனர். அதில் ஆண்களை விட பெண்கள் 12 ஆயிரத்து 910 பேர் அதிகமாக உள்ளனர்.

மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சட்டசபை தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:- காரைக்குடியில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 221 ஆண்களும், பெண்கள் 1 லட்சத்து 49 ஆயிரத்து 591 பேரும், இதர பிரிவினர் 40 பேர் என மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 852 வாக்காளர்கள் உள்ளனர்.

திருப்பத்தூரில் ஆண்கள் 1 லட்சத்து 37 ஆயிரத்து 28, பெண்கள் 1 லட்சத்து 40 ஆயிரத்து 770, இதர பிரிவினர் 10 என மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 808 பேர் வாக்காளராக உள்ளனர். சிவகங்கையில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 716 ஆண்களும், 1 லட்சத்து 43 ஆயிரத்து 389 பெண்களும், இதர பிரிவினர் 3 என மொத்தம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர்.

மானாமதுரை தனி தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 385, பெண்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 510, இதர பிரிவினர் 3 என மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 898 பேர் வாக்காளராக உள்ளனர்.

Next Story