ரெயிலில் அடிபட்டு கால் டாக்சி டிரைவர் பலியான வழக்கில் திருப்பம்: போலீசார் திட்டியதால் தற்கொலை செய்து கொள்வதாக வெளியான வீடியோவால் பரபரப்பு


ரெயிலில் அடிபட்டு கால் டாக்சி டிரைவர் பலியான வழக்கில் திருப்பம்: போலீசார் திட்டியதால் தற்கொலை செய்து கொள்வதாக வெளியான வீடியோவால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Feb 2019 12:30 AM GMT (Updated: 2019-02-01T05:03:26+05:30)

மறைமலைநகர் ரெயில் நிலையம் அருகே ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்த கால் டாக்சி டிரைவர், போக்குவரத்து போலீசார் திட்டியதால் தற்கொலை செய்துகொள்வதாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.

தாம்பரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் ரெயில் நிலையம் அருகே கடந்த மாதம் 25-ந் தேதி தண்டவாளத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். அவரது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தலை தனியாகவும், உடல் தனியாகவும் கிடந்தது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த தாம்பரம் ரெயில்வே போலீசார், பலியான வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அதில் பலியாகி கிடந்த வாலிபர், காஞ்சீபுரம் அருகே உள்ள கம்மவர்பாளையம் பகுதியை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் ராஜேஷ் (வயது 25) என தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று சமூக வலைதளங்களில் ராஜேஷ், இறப்பதற்கு முன்பாக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று பரவியது. அதில் அவரது சாவுக்கு போக்குவரத்து போலீசார்தான் காரணம் என தெரிவித்துவிட்டு, ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டு இருப்பது தெரிந்தது. அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:-

பாடியில் இருந்து கோயம்பேடு நோக்கி ஒரு பெண் ஊழியரை ஏற்றிக்கொண்டு வந்த நான், மற்றொரு ஆண் ஊழியருக்காக அண்ணாநகர் பகுதியில் உள்ள முதல் சிக்னல் அருகே சாலையோரமாக காருடன் நின்று இருந்தேன்.

அங்கு வந்த 2 போக்குவரத்து போலீசார், காரை அங்கு நிறுத்தக்கூடாது என்றனர். இதனால் நான், காரை சிறிதுதூரம் தள்ளிச்சென்று நிறுத்தினேன். மீண்டும் அங்கு வந்த போலீசார், என்னை தகாத வார்த்தைகளால் திட்டினர். நான் காரில் பெண் ஊழியர் இருப்பதால் கொஞ்சம் மரியாதையாக பேசுங்கள் என்றேன். ஆனால் அவர்கள் தொடர்ந்து என்னை தகாத வார்த்தைகளால் திட்டினர்.

எங்கே சென்றாலும் போக்குவரத்து போலீசாருடன் பெரும் தொல்லையாக உள்ளது. திருவொற்றியூர் பகுதிக்கு சென்றபோது சாலையோரம் காரை நிறுத்திவிட்டு படுத்து இருந்தேன். அங்கு வந்த போலீசார் காருக்கு ‘லாக்’ போட்டுவிட்டு ரூ.500 கொடுத்தால்தான் அதை எடுப்போம் என மிரட்டினர். பணத்தை கொடுத்துவிட்டு ரசீது கேட்டால் எதிர்த்து பேசுவதாக கூறி தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அனுப்பினர்.

உங்க வேலை ‘நோ பார்க்கிங்’ பகுதியில் வாகனத்தை நிறுத்தினால் அபராதம் வசூலிப்பது. ஆனால் நான், ஒரு குப்பை தொட்டியின் அருகே நிறுத்தி இருந்ததற்கு என்னை இவ்வாறு பெண் ஊழியர் முன் கேவலமாக திட்டிவிட்டனர்.

எனது சாவுக்கு காரணமே சென்னை போக்குவரத்து போலீசார்தான். வேறு யாரும் கிடையாது. இவர்களால் எந்த டிரைவரும் நிம்மதியாக இருக்க முடியாது. இது என்னோட கடைசியாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இந்த வீடியோ ‘வாட்ஸ்-அப்’, முகநூல், டுவிட்டர் என சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் தாம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைசெல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ராமுதாய் மற்றும் ரெயில்வே போலீசாரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதன்பேரில் சென்னை மேற்கு இணை கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் தனிப்படையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோவில் ராஜேஷ் கூறியதுபோல அண்ணாநகர் சிக்னல் மற்றும் திருவொற்றியூர் பகுதியில் அப்போது எந்த போக்குவரத்து போலீஸ்காரர்கள் பணியில் இருந்தார்கள்? என்பது குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த வீடியோ வெளியானது குறித்து தற்கொலை செய்த டிரைவர் ராஜேசின் உறவினர் கூறியதாவது:-

பிரேத பரிசோதனைக்கு பிறகு ராஜேசின் உடலை எங்களிடம் ஒப்படைத்த ரெயில்வே போலீசார், ராஜேசின் ஏ.டி.எம். கார்டு, மணிபர்ஸ், உடைகள் ஆகியவற்றுடன், அவரிடம் உள்ள 2 செல்போன்களில் ஒன்றை மட்டும் கொடுத்தனர். மற்றொரு செல்போனை கேட்டதற்கு 2 நாட்கள் அலைக்கழித்து கொடுத்தனர்.

அதை ஆய்வு செய்தபோது அதில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் அழிக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நாங்கள், செல்போனை ‘ரெகவரி’ செய்து பார்த்தபோதுதான் அதில் தற்கொலைக்கு முன்னதாக ராஜேஷ், பேசி இருந்த வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.

அதில் தனது தற்கொலைக்கு போக்குவரத்து போலீசார்தான் காரணம் என கூறி இருந்ததால் அதை ரெயில்வே போலீசார் அழித்து உள்ளனர். எனவே ராஜேசின் தற்கொலைக்கு காரணமாக இருந்த போக்குவரத்து போலீசார் மீதும், அவரது வீடியோவை அழித்து உண்மையை மறைக்க முயற்சிசெய்த தாம்பரம் ரெயில்வே போலீசார் மீதும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் கால் டாக்சி டிரைவர் தற்கொலைக்கு காரணமான போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நந்தம்பாக்கத்தில் தனியார் தொழில் பூங்கா முன்பு திரண்ட 100-க்கும் மேற்பட்ட கால் டாக்சி டிரைவர்கள், நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர். சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த நந்தம்பாக்கம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை 100-க்கும் மேற்பட்ட கால் டாக்சி டிரைவர்கள், திருமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் தற்கொலை செய்த டிரைவர் ராஜேசின் தாயார் கீதா, தந்தை மூர்த்தி, அண்ணன் ராஜ்குமார் ஆகியோரும் அங்கு வந்தனர்.

முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் திருமங்கலம் இணை கமிஷனர் விஜயகுமாரி, அண்ணாநகர் துணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story