தேனியில் நடந்து வரும் அரசு பொருட்காட்சியை 50 ஆயிரம் பேர் பார்த்தனர் - கலெக்டர் தகவல்


தேனியில் நடந்து வரும் அரசு பொருட்காட்சியை 50 ஆயிரம் பேர் பார்த்தனர் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 1 Feb 2019 10:57 PM IST (Updated: 1 Feb 2019 10:57 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் நடந்து வரும் அரசு பொருட்காட்சியை 50 ஆயிரத்து 105 பேர் பார்த்துள்ளனர் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி,

தேனி புறவழிச்சாலையில் கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு அரசு சார்பில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசு பொருட்காட்சி கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி தொடங்கியது. தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி நடந்து வருகிறது.

இதற்கு நுழைவுக் கட்டணமாக சிறுவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.15, மாணவ-மாணவிகளுக்கு ரூ.5 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பொருட்காட்சியில் 27 அரசு துறைகளின் அரங்குகள் மற்றும் தேனி-அல்லிநகரம் நகராட்சி, ஆவின், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தாட்கோ உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்களின் அரங்குகளும், 5 தனியார் அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இதைத்தவிர நாள்தோறும் கலைநிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், நாடகம் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பொருட்காட்சியை நுழைவுக் கட்டணம் செலுத்தி இதுவரை 50 ஆயிரத்து 105 பேர் பார்த்துள்ளனர். நுழைவுக் கட்டணம் மூலம் அரசுக்கு ரூ.5 லட்சத்து 85 ஆயிரத்து 945 வருவாய் கிடைத்து உள்ளது.

வருகிற 10-ந்தேதியுடன் பொருட்காட்சி நிறைவு பெறுகிறது. எனவே, இந்த பொருட்காட்சியை அனைவரும் கண்டுகளித்து அரசு திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story