மக்கும், மக்காத குப்பை மூலம் உரம் தயாரிக்கும் கட்டிடம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு ஆரணியில் பரபரப்பு


மக்கும், மக்காத குப்பை மூலம் உரம் தயாரிக்கும் கட்டிடம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு ஆரணியில் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Feb 2019 5:54 PM GMT (Updated: 2019-02-01T23:24:19+05:30)

ஆரணியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை மூலம் உரம் தயாரிக்க கட்டிடம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி, 


ஆரணி நகராட்சி மூலம் 5 இடங்களில் குப்பைகளை அந்தந்த பகுதிகளில் சேகரித்து அதன் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து அதன் மூலம் நுண்ணுயிர் உரம் தயாரிப்பதற்காக கட்டிடங்கள் அமைக்கும் பணி ஆரணி நகராட்சி வளாகம், புத்திரகாமேஸ்வரர் கோவில் பகுதி, வி.ஏ.கே.நகர் நகராட்சி குடிநீர் நீரேற்றும் நிலையம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் ஜெயலட்சுமி நகர் பகுதியில் நடக்கும் கட்டுமான பணிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் கண்ணகி நகர் பகுதியில் நகராட்சி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகிலும் கட்டிடம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அதற்கு அப்பகுதி பொதுமக்கள் இந்த பகுதியில் மர்ம காய்ச்சல், டெங்கு போன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு போதிய வசதியும் இல்லாததால் மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் இங்கு குப்பை கூடம் அமைத்து மேலும் இப்பகுதியை நோய்களின் இருப்பிடமாகவே மாற்றிவிடுவீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து நேற்று அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி நகராட்சி ஆணையாளர் கு.அசோக்குமார், பொறியாளர் கணேசன் மற்றும் உதவி பொறியாளர்கள், நகராட்சி அலுவலர்கள், ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர். இதனால் அங்கு மேற்கொண்டு பணி செய்யாமல் அதிகாரிகள் நிறுத்தினர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story