ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளிக்கு பூட்டுப்போட்டு மாணவர்கள் போராட்டம்
விழுப்புரம் அருகே ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பள்ளிக்கு பூட்டுப்போட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சுந்தரமூர்த்தி. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற ஆசிரியர்கள் அனைவரும் அரசு விதித்த கெடுவிற்குள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிய நிலையில் ஆசிரியர் சுந்தரமூர்த்தி மட்டும் பணிக்கு திரும்பவில்லை. இதையடுத்து துறை ரீதியாக அவரை முண்டியம்பாக்கம் பள்ளியில் இருந்து கண்டாச்சிபுரம் அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி உத்தரவிட்டார். அதன் பிறகு முண்டியம்பாக்கம் பள்ளிக்கு சிந்தாமணி பள்ளியில் பணிபுரிந்த லிங்கன் என்ற ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் மாணவ- மாணவிகள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்தனர். அப்போது மாணவர்களுக்கு ஆசிரியர் சுந்தரமூர்த்தி இடமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அனைவரும் திடீரென பள்ளியின் கதவை இழுத்து மூடி பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீண்டும் அவரை முண்டியம்பாக்கம் பள்ளியில் நியமிக்க வலியுறுத்தியும் மாணவ- மாணவிகள் கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் மற்றும் போலீசார், அந்த பள்ளிக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன் ஆகியோர் விரைந்து வந்து மாணவ- மாணவிகளை சமாதானம் செய்து அவர்களை வகுப்பிற்குள் செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில் மாணவ- மாணவிகள் சமாதானம் அடைந்து காலை 10 மணிக்கு வகுப்பறைக்கு சென்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story