விவசாயிகள் விளைபொருட்களை கூடுதல் விலைக்கு விற்க நடவடிக்கை வேளாண் அதிகாரி தகவல்
விவசாயிகள் விளைபொருட்களை கூடுதல் விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
மாவட்ட வணிகத்துறை துணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– மாவட்ட வேளாண் வணிகத்துறையின் மூலம் விவசாய உற்பத்தி பொருட்களான சிறுதானியங்கள், இயற்கைவழி சாகுபடி, பாரம்பரிய நெல், நாட்டு செக்கு எண்ணெய், நீரா சர்க்கரை, தென்னை, வெட்டிவேர் மற்றும் முருங்கை ஆகியவைகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் தேசிய வேளாண் விரிவாக்கத் திட்டத்தில் தலா ஆயிரம் விவசாயிகளை ஒன்றிணைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, வணிக அளவிலான வேளாண் சார்ந்த தொழில்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் சிங்கம்புணரி வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரம் தென்னை விவசாயிகளை ஒன்றிணைத்து, சிவகங்கை தென்னை உற்பத்தியாளர்கள் சங்கம் தொடங்கி, ரூ.10 லட்சம் மானியத்தில் நாட்டு செக்கு எந்திரங்கள் நிறுவி தரமான செக்கு எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர்
மாதம் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செக்கு எண்ணெய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரூ.8 லட்சம் மானியத்தில் வேளாண் வாடகை எந்திர மையமும் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூட்டுப்பண்ணையம் திட்டத்தில் எஸ்.புதூர் வட்டாரத்தை தலைமையிடமாகக் கொண்டு எஸ்.புதூர், சிங்கம்புணரி, திருப்பத்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 900 விவசாயிகளை ஒன்றிணைத்து ஸ்ரீ கற்பக விநாயகர் கூட்டுப்பண்ணை உற்பத்தியாளர் நிறுவன சங்கம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் 2018–19–ம் ஆண்டிற்கு நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை வட்டாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் ஆயிரம் விவசாயிகளை ஒன்றிணைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் குறைவான மழைப்பொழிவால், விவசாயிகள் மாற்றுப் பயிர்களான சிறுதானியங்களை பயிர் செய்கின்றனர். அவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, அதிக விலைக்கு விற்பனை செய்ய, விவசாய ஆர்வலர் குழுக்களை சேர்ந்த மகளிர் மூலம், சிறுதானியங்கள் உள்ளிட்ட விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கண்காட்சியாக வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.