பரமக்குடி வைகையாற்றில் சிதறிக்கிடந்த ரேஷன்கார்டுகள் பொதுமக்கள் அதிர்ச்சி
பரமக்குடி வைகையாற்றில் ரேஷன்கார்டுகள் சிதறிக்கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பரமக்குடி,
பரமக்குடி நகராட்சி பகுதியான திருள்ளுவர் நகர், பாரதிநகர் கிழக்கு பகுதி, காட்டுப்பரமக்குடி, எமனேசுவரம், ஜீவா நகர், வசந்தபுரம் உள்பட பல்வேறு வார்டுகளை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் காக்காத்தோப்பு வைகையாற்றில் உள்ள காட்டு கருவேல முட்புதருக்குள் சிதறிக்கிடந்தன. இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இவை கடந்த 2005–2009–ம் ஆண்டில் அச்சடிக்கப்பட்ட பச்சை, வெள்ளை நிற ரேஷன்கார்டுகள். இவற்றின் மூலம் தற்போது வரை சீனி, அரிசி, மண்எண்ணெய் உள்பட அத்தியாவசிய பொருட்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் வாங்கியதற்கான பதிவும் செய்யப்பட்டுஉள்ளது.
இந்த நிலையில் அந்த ரேஷன்கார்டுகள் ஏன் தூக்கி எறியப்பட்டன. அவைகள் போலி குடும்ப அட்டைகளா என்பது தெரியவில்லை. இதனை அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்து வட்ட வழங்கல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரிகளோ அதனை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வட்ட வழங்கல் துறை அதிகாரி கூறுகையில், புதிய ஸ்மாட் அட்டை வழங்கப்பட்டுள்ளதால் அந்த ரேஷன்கார்டுகள் காலாவதி ஆகியிருக்கலாம் என்று தெரிவித்தார்.