100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
காரங்காடு கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகா ஆதியூர் ஊராட்சி காரங்காடு கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அலுவலகத்தில் இல்லாததால் அலுவலக வளாகத்தில் அமர்ந்து அதிகாரிகளுக்காக காத்திருந்தனர். அதனை தொடர்ந்து அங்கு வந்த ஒன்றிய பணி மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் ஆகியோர் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இந்த யூனியனில் மற்ற ஊராட்சிகளில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. ஆனால் ஆதியூர் ஊராட்சியில் எங்கள் காரங்காடு கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு கடந்த ஆண்டு 20 நாட்களுக்கு மட்டுமே வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் கடந்த ஆண்டில் 100 நாள் வேலை திட்ட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பள தொகை நீண்ட மாதங்களாக நிலுவையில் உள்ளது. எங்களின் வங்கி கணக்குகளில் இதுநாள் வரை வரவு வைக்கப்படவில்லை. மேலும் எங்கள் கிராமத்தில் தனிநபர் கழிப்பறைகள் கட்டியதற்கு அரசு வழங்கும் மானிய தொகை ரூ.12 ஆயிரம் பல மாதங்களாக வழங்கப்படவில்லை. சிலருக்கு மட்டும் ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே பணம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுஉள்ளது.
எனவே காரங்காடு கிராம மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தொடர்ந்து மற்ற ஊராட்சிகளை போல் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். கழிப்பறை கட்டியதற்கான மானிய தொகை மற்றும் 100 நாள் வேலை திட்ட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பள தொகை நிலுவையை உடனே வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
அதற்கு, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் தமிழ்செல்வன் இனிவரும் காலங்களில் தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே உள்ள நிலுவை தொகையை கணினியில் சரிபார்த்து குறைகளை நிவர்த்தி செய்தபின்னர் வழங்கப்படும். மேலும் கழிப்பறை முழுமையாக கட்டி முடித்தவர்களுக்கு உடனடியாக ஆய்வு செய்து மானிய தொகை வழங்குவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.