திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு ஆழ்துளை கிணற்றில் தீ - விவசாயிகள் அதிர்ச்சி


திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு ஆழ்துளை கிணற்றில் தீ - விவசாயிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 1 Feb 2019 10:45 PM GMT (Updated: 1 Feb 2019 7:42 PM GMT)

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆழ்துளை கிணற்றில் தீப்பற்றி எரிந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காந்தலவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 50), விவசாயி. இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 450 அடியில் ஆழ்துளை கிணறு தோண்டினார். பின்னர் அந்த கிணற்றை மூடி வைத்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த ஆழ்துளை கிணற்றுக்குள் மின் மோட்டாரை பொருத்தினார். அதன் மூலம் விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சினார். அதேபோல் நேற்று முன்தினம் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தபோது குழாயில் தண்ணீர் குறைந்த அளவே வந்தது. ஆனால் காற்று அதிகளவில் வெளியேறியது. இதனால் அவர் மோட்டாரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று காலை ஏழுமலை தனது நிலத்திற்கு வந்தார். அப்போது மின்மோட்டாரை இயக்கி பார்த்தபோது தண்ணீர் குறைவாகவே வந்தது. ஆனால் காற்று அதிகளவில் வெளியேறியது.

இதனால் மனவேதனை அடைந்த ஏழுமலை, அந்த ஆழ்துளை கிணறு உள்ள இடத்தில் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காண்பித்தார். அப்போது தண்ணீர் வெளியே வரும் குழாயில் கற்பூரத்தின், தீ பற்றி திடீரென எரியத்தொடங்கியது.

இதைப்பார்த்த ஏழுமலை, அந்த தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ வேகமாக கொழுந்து விட்டு எரிந்தது. இதையறிந்த மற்ற விவசாயிகளும் அங்கு ஓடிவந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க எவ்வளவோ போராடினர். இருப்பினும் முடியவில்லை.

பின்னர் இதுகுறித்து அவர்கள் திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

இதை தொடர்ந்து, அந்த ஆழ்துளை கிணற்றை தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்தனர். பின்னர் நிலைய அலுவலர் பாஸ்கரன் கூறியதாவது:-

ஏழுமலையின் விவசாய நிலத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு தோண்டிவிட்டு மூடி வைத்துள்ளனர். அதன் பின்னர் தற்போதுதான் அதில் மின்மோட்டார் பொருத்தி பயன்படுத்தியுள்ளனர். 3 மாதமாக ஆழ்துளை கிணறு மூடி வைக்கப்பட்டிருந்ததால் அதில் ஒருவிதமான வாயு உருவாகியுள்ளது. அது தெரியாமல் மின் மோட்டாரை இயக்கியதால் தண்ணீருடன் அந்த வாயுவும் வெளியேறி உள்ளது. அந்த சமயத்தில் அதன் அருகே கற்பூரத்தை ஏற்றியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்னும் சில நாட்கள் அந்த ஆழ்துளை கிணற்றை திறந்து வைத்தால் அதில் இருக்கும் வாயு வெளியேறி விடும். அதன் பின்னர் ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். இதன் பின்னரும் இதுபோல் தீப்பிடித்து எரிந்தால் இந்த ஆழ்துளை கிணற்றை நிரந்தரமாக மூடிவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story