உற்பத்தி நடைபெறாவிட்டாலும் பட்டாசு ஆலைகளின் உரிமம் புதுப்பிப்பு பணி தீவிரம்
சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் உற்பத்தி இல்லாத நிலையிலும் ஆலைகளின் உரிமங்கள் புதுப்பிக்கும் பணி மட்டும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டத்தில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வந்த நிலையில் பட்டாசு தொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில் பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருட்களை பயன்படுத்த கூடாது. பசுமை வெடிகளை மட்டும் தயார் செய்ய வேண்டும். சரவெடிகளை தயாரிக்க கூடாது என்ற அதிரடி தீர்ப்பு கூறியது.
இதைதொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டு விதிகளை பின்பற்றி பட்டாசுகளை தயாரிக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது. இந்த நோட்டீசை பெற்ற பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13–ந்தேதி முதல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடாமல் ஆலைகளை பூட்டி விட்டனர். இதனால் இந்த ஆலைகளில் பணியாற்றி வந்த 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர், இந்த ஆண்டு ஜனவரி ஆகிய மாதங்களில் மட்டும், சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகள் ஆய்வு தனி தாசில்தார் அலுவலகத்தில் 277 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பட்டாசுகள் தயாரிக்க முடியாத நிலை இருந்தாலும் அடுத்து வரும் நாட்களில் பட்டாசுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் நீங்கும், மீண்டும் பழையபடி பட்டாசுகளை தயாரிக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கையில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தங்களது ஆலைகளில் உரிமங்களை புதுப்பித்து வருகிறார்கள். ஒரு முறை ஆலையை புதுப்பித்தால் அதன் ஆயுள் காலம் 3 வருடம் ஆகும்.