கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் வாழைகளை சேதப்படுத்திய காட்டுயானைகள்


கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் வாழைகளை சேதப்படுத்திய காட்டுயானைகள்
x
தினத்தந்தி 1 Feb 2019 10:45 PM GMT (Updated: 1 Feb 2019 8:49 PM GMT)

கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் வாழை மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தின. தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

பெரும்பாறை,

கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான கே.சி.பட்டி, தாண்டிக்குடி, பெரியூர், பெருங்கானல், பள்ளத்துக்கால்வாய், சேம்படி, ஊத்து உள்ளிட்ட வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவைகள் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகிறது. குறிப்பாக காட்டுயானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டுயானைகள் தோட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலி, சோலார் வேலி ஆகியவற்றை உடைத்து காபி, வாழை, ஆரஞ்சு, மிளகு, அவரை, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றன. இவற்றை தடுக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

இந்தநிலையில் கே.சி.பட்டி, எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கு சொந்தமான காபி தோட்டம் கே.சி.பட்டி-பெரியூர் மலைப்பாதையில் உள்ளது. இங்கு வாழை, மிளகு, ஆரஞ்சு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த தோட்டத்தை மணியன் (வயது 50) மற்றும் அவருடைய மனைவி நாகம்மாள் (40), மகள் பிரியா (24) ஆகியோர் தோட்டத்து வீட்டில் தங்கியிருந்து பராமரித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் 8 காட்டுயானைகள் கூட்டமாக தோட்டத்துக்குள் புகுந்தன. இரும்பு கேட்டை உடைத்து தோட்டத்துக்குள் புகுந்த காட்டுயானைகள் அங்கிருந்த வாழை, ஆரஞ்சு மரங்களை சேதப்படுத்தின. மேலும் தோட்டத்து வீட்டின் கதவையும் உடைக்க முயன்றன. யானைகளை கண்டு அதிர்ச்சி அடைந்த மணியன் குடும்பத்தினர் சத்தம் போடாமல் உயிருக்கு பயந்து வீட்டுக்குள் பதுங்கினர்.

அதிகாலை வரை முகாமிட்டு இருந்த காட்டுயானைகள் பின்னர் தானாக வனப்பகுதிக்குள் சென்றன. அதன்பின்னரே மணியன் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். நேற்று காலை தகவல் அறிந்து அய்யப்பன் தோட்டத்துக்கு வந்து பார்த்தார். அப்போது ஏராளமான வாழை மரங்கள் நாசமாகி இருப்பது தெரியவந்தது. காட்டு யானைகளின் தொடர் அட்ட காசத்தால்அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

Next Story