30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி- கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்


30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி- கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்
x
தினத்தந்தி 2 Feb 2019 3:15 AM IST (Updated: 2 Feb 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி-கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.

காரைக்கால், 

நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களின் வருவாயை முற்றிலுமாக குறைத்துவிட்டு, உள்ளாட்சிகளின் சொந்த வருவாயிலேயே ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என புதுச்சேரி அரசு கூறுவது ஏற்புடையதல்ல. அரசின் இந்த தவறான முடிவால் காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு மாதாமாதம் ஊதியம் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்படும். கடந்த 2 மாதங்களாக உள்ளாட்சி நிர்வாகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

எனவே ஏற்கனவே பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி உள்ளாட்சி ஊழியர்களுக்கு புதுச்சேரி அரசே நேரடியாக ஊதியம் வழங்க ஏதுவாக பொது பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கி, உள்ளாட்சித்துறையின் கணக்கின்கீழ் உள்ளாட்சி ஊழியர்களுக்கு அரசு நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும்.

நகராட்சிகளில் நடைமுறையில் இருந்த சுங்க வரிக்கு ஈடான மானியத்தொகை, கொம்யூன் பஞ்சாயத்துகளில் வீட்டு வரிக்கு ஈடான மானிய தொகைகளை அரசே சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிந்தனர். போராட்டத்தில் காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜெய்சிங், பொதுச்செயலாளர் ஷேக் அலாவுதீன், காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன தலைவர் அய்யப்பன் மற்றும், காரைக்கால் நகராட்சி, திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி, திருமலைராயன்பட்டினம், நிரவி உள்ளிட்ட கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் வருகிற 4-ந்தேதி வரை நடைபெறும் எனவும், 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

Next Story