வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி வாங்கிய பணத்தை திருப்பி தராததால் ஏஜெண்டை அடித்துக்கொலை செய்தோம் கைதான ஆட்டோ டிரைவர் வாக்கு மூலம்
வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி வாங்கிய பணத்தை திருப்பி தராததால் ஏஜெண்டை அடித்துக்கொலை செய்தோம் என்று கைதான ஆட்டோ டிரைவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மயிலாடுதுறை,
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடுவங்குடியில் உள்ள ஒரு குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் பிணம் மிதந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்தவர் மயிலாடுதுறை அருகே உள்ள கிளியனூரை சேர்ந்த முகமது ரபீக் (வயது 50) என்பதும், அவர், பணம் வாங்கி கொண்டு வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் ஏஜெண்டாக இருந்தார் என்பதும் தெரியவந்தது. இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பாக ஆட்டோ டிரைவர் சீனிவாசனிடம் (39) போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் போலீசாரிடம், சீனிவாசன் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-
புதுச்சேரியை சேர்ந்த சரவணன், அவரது நண்பர்கள் சக்திவேல், வல்லம்படுகையை சேர்ந்த மாறன் ஆகியோர் தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.9 லட்சத்தை முகமது ரபீக்கிடம், வெளிநாட்டிற்கு வேலைக்காக கொடுத்துள்ளனர். ஆனால், வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைக்காமல் முகமதுரபீக் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் கொடுத்த பணத்தை 3 பேரும் திருப்பி கேட்டனர். இதனை தொடர்ந்து மேற்கண்ட 3 பேரும், என்னை அழைத்து கொண்டு கடந்த மாதம் 18-ந் தேதி முகமது ரபீக் வீட்டிற்கு சென்று கொடுத்த பணத்தை கேட்டனர். பணம் கொடுப்பதற்கு முகமது ரபீக் கால அவகாசம் கேட்டதால் மீண்டும் கடந்த 21-ந் தேதி வரும்போது பணத்தை தயார் செய்து தர வேண்டும் என்று முகமது ரபீக்கை எச்சரிக்கை செய்து விட்டு சென்றோம்.
அதேபோல் கடந்த 21-ந்தேதி சரவணன், சக்திவேல், மாறன் ஆகியோருடன் நானும் சேர்ந்து மயிலாடுதுறை தற்காலிக பஸ் நிலையத்தில் கிளியனூர் செல்வதற்காக பஸ்சில் இருந்த முகமது ரபீக்கை வெளியே அழைத்து, காரில் கடத்தி சென்றோம். அவரை புதுச்சேரிக்கு அழைத்து சென்று பணத்தை எப்போது கொடுப்பாய் என்று கூறி தாக்கினோம். இதில் பலத்த காயம் அடைந்த முகமது ரபீக் மயங்கி விழுந்து இறந்தார். இதனால் பதற்றம் அடைந்த நாங்கள் 4 பேரும் முகமது ரபீக் உடலை காரில் ஏற்றி கொண்டு மயிலாடுதுறையை நோக்கி புறப்பட்டு, வைத்தீஸ்வரன்கோவில் வழியாக கடுவங்குடிக்கு சென்றபோது அங்கு இருந்த ஒரு குளத்தில் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் முகமது ரபீக்கின் உடலை வீசிவிட்டு சென்றோம்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.
பின்னர் போலீசார் மேற்கண்ட வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து, சீனிவாசனை கைது செய்து நேற்று மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் மேற்கண்ட சம்பவத்திற்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story