வரதம்பட்டு ஊராட்சி அழகன்தோப்பு பகுதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
மணல்மேடு அருகே வரதம்பட்டு பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணல்மேடு,
மணல்மேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மணல்மேடு அருகே வரதம்பட்டு ஊராட்சி அழகன்தோப்பு பகுதியில் கும்பகோணம்-சீர்காழி செல்லும் மெயின்ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் உடைப்பு ஏற்பட்ட குழாயில் இருந்து அதிக அளவில் குடிநீர் வெளியேறி, அந்த பகுதியில் உள்ள வயலுக்கு செல்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் தற்போதுவரை குழாய் சீரமைக்கப்படவில்லை. மேலும், குடிநீர் செல்லும் இடத்தில் குப்பைகள் அதிகமாக கிடப்பதால் அந்த நீர் மாசுப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில் தற்போது குழாய் உடைந்து குடிநீர் வீணாவது வேதனை அளிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இனிவரும் காலம் கோடை காலமாக இருப்பதால் குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும். இல்லையென்றால் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக இருக்கும். எனவே, மேற்கண்ட பகுதியில் குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story