மஞ்சூர் அருகே மான் இறைச்சி வைத்திருந்த தொழிலாளி கைது
மஞ்சூர் அருகே மான் இறைச்சி வைத்திருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்றொருவரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மஞ்சூர்,
மஞ்சூர் அருகே உள்ளது கிண்ணக்கொரை. இது தமிழக-கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி இருக்கிறது. இங்கு காட்டெருமை, சிறுத்தைப்புலி, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரிகின்றன. வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீரை தேடி அலையும் வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கிண்ணக்கொரை வனப்பகுதியில் சிலர் மான் வேட்டையாடியதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குந்தா வனச்சரகர் சரவணன் தலைமையில் வனவர் ரவி மற்றும் வனத்துறையினர் கிண்ணக்கொரைக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி மகேஷ்(வயது 48) என்பவரது வீட்டில் வனத்துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது வீட்டில் மான் இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், ஊராடா பகுதியை சேர்ந்த ராமன் என்பவர் வனப்பகுதியில் கடமானை வேட்டையாடி இறைச்சியை மகேசுக்கு விற்றது தெரிய வந்தது.
இதையடுத்து மான் இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மகேசை கைது செய்தனர். இதற்கிடையில் மான் இறைச்சியை விற்ற ராமன் தலைமறைவாகிவிட்டார். அவரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story