கொண்டாட தொண்டர்களுக்கு வேண்டுகோள் மத்திய பட்ஜெட் சமூக, விவசாயிகள் நலனுக்கானது எடியூரப்பா அறிக்கை
மத்திய பட்ஜெட் சமூக, விவசாயிகள் நலனுக்கானது என்றும், இதை தொண்டர்கள் கொண்டாட வேண்டும் என்றும் எடியூரப்பா கூறி உள்ளார்.
பெங்களூரு,
மத்திய பட்ஜெட் குறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-
சாமானிய மற்றும் நடுத்தர மக்களின் நலனை காக்கும் வகையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டால் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறுவார்கள். மேலும் வளர்ச்சியை நோக்கமாக கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது உண்மையான, முன்எப்போதும் இல்லாத வகையில் மிக சிறப்பான பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியை மோடி ஏற்படுத்தினார். இதன் பயனை மக்களுக்கு வழங்கும் பொருட்டு இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் மிக சிறப்பானது.
நிதி ஆதாரம் பெருகியது
வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரித்தது, வரிஏய்ப்பை தடுத்தது, வரி வருவாயை பெருக்கியது, பினாமி சொத்துகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தது, கட்டுமான தொழிலை முறைப்படுத்தியது போன்ற நடவடிக்கையால் மத்திய அரசின் நிதி ஆதாரம் பெருகியது.
இந்த நிதியை கொண்டு மக்கள் நலத்திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசை விமர்சனம் செய்பவர்களிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன், இந்திய உள்நாட்டு உற்பத்தி 7.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதை பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள்?. நாடு வளர்ச்சி அடைகிறது, அரசிடம் அதிக நிதி உள்ளது என்பதை இது குறிக்கவில்லையா?.
விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம்
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் நேரடியாக வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு ரூ.95 ஆயிரம் கோடி நிதிச்சுமை ஏற்படும். அங்கன்வாடி ஊழியர்களின் சம்பள உயர்வு, மீனவர்களின் நலனுக்கு தனி இயக்குனரகம் அமைத்தல், வருமான வரி உச்சவரம்பு உயர்வு, ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்தல் போன்ற திட்டங்கள் நாட்டுக்கு தேவையானவை. இது பாராட்டப்பட வேண்டிய திட்டங்கள். இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை வைத்து கொண்டாடுமாறு எங்கள் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இது அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய சமூக, விவசாயிகள் நலனுக்கான பட்ஜெட் ஆகும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Related Tags :
Next Story