நட்சத்திர ஓட்டலில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.85 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
நட்சத்திர ஓட்டலில் மேலாளர் வேலை தருவதாக கூறி ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் மோசடி செய்த 2 பேரை போலீசார் நொய்டாவில் வைத்து கைது செய்தனர்.
மும்பை
மும்பை பைதோனியை சேர்ந்தவர் சம்சேர் நதீம். இவரது செல்போனுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அழைப்பு வந்தது. அதில், எதிர் முனையில் பேசிய 2 பேர் டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மேலாளர் பதவி காலியாக இருப்பதாக கூறினர். அந்த பணியில் சேர விரும்பினால் பரிசீலனை கட்டணமாக ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் செலுத்தும்படி ஒரு வங்கிக்கணக்கை கூறினர்.
இதனை உண்மை என நம்பிய சம்சேர் நதீம் அவர்கள் குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தினார். இதையடுத்து அவரது இ-மெயிலுக்கு பணி நியமன ஆணை வந்தது.
நொய்டாவில்...
இதன்பின்னர் சில நாட்கள் கழித்து அந்த ஆசாமிகள் ரூ.71 ஆயிரம் வங்கியில் செலுத்தும் படி தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த சம்சேர் நதீம் விசாரித்ததில், தனது இ-மெயிலுக்கு வந்திருப்பது போலி பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பைதோனி போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதல் அந்த ஆசாமிகள் நொய்டாவில் இருந்து பேசியிருந்தது தெரியவந்தது.
2 பேர் கைது
இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று, உள்ளுர் போலீசாரின் உதவியுடன் இந்த மோசடியில் ஈடுபட்ட பாக்யரத் தியாகி(வயது28), ஜாகீர் உசேன்(30) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் போலி கால்சென்டர் நடத்தி பணமோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
அங்கிருந்து 15 செல்போன்கள், ரூ.1 லட்சம் ரொக்கம், 2 மடிக்கணினிகள், 6 டெபிட் கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் விசாரணைக்காக மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர்.
Related Tags :
Next Story