பயணியை கன்னத்தில் அறைந்த ஆட்டோ டிரைவருக்கு ‘பளார்’ நவநிர்மாண் சேனாவினர் அதிரடி


பயணியை கன்னத்தில் அறைந்த ஆட்டோ டிரைவருக்கு ‘பளார்’ நவநிர்மாண் சேனாவினர் அதிரடி
x
தினத்தந்தி 1 Feb 2019 10:36 PM GMT (Updated: 2019-02-02T04:06:19+05:30)

கூடுதல் கட்டணம் கேட்டு பயணியை கன்னத்தில் அறைந்ததால் ஆட்டோ டிரைவர் ஒருவர் நவநிர்மாண் சேனாவினரிடம் சரமாரியாக அடி வாங்கினார்.

மும்பை, 

மும்பை குர்லா, பாந்திரா- குர்லா காம்ப்ளக்ஸ் இடையே வினோத்குமார் ராய் என்பவர் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று இவரது ஆட்டோவில் வாலிபர் ஒருவர் பயணம் செய்தார். அந்த வாலிபரிடம் வழக்கமாக வாங்கும் 20 ரூபாய் கட்டணத்துக்கு பதிலாக 10 ரூபாய் கூடுதலாக கேட்டு உள்ளார். ஆனால் அந்த வாலிபர் கொடுக்க மறுத்து இருக்கிறார்

இதனால் கோபம் அடைந்த வினோத்குமார் ராய், அந்த வாலிபரை சரமாரியாக கன்னத்தில் தாக்கி உள்ளார். இதனால் பயந்துபோன அந்த வாலிபர் அவர் கூடுதலாக கேட்ட 10 ரூபாயை கொடுத்தார்.

இந்தநிலையில், ஆட்டோ டிரைவர் வினோத்குமார் ராய், வாலிபரை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின.

டிரைவருக்கு அடி

இதை பார்த்த மராட்டிய நவநிர்மாண் சேனா பிரமுகர்கள் நிதின் நந்த்காவ்கர், அகில் சிட்ரே ஆகிய 2 பேர் அந்த ஆட்டோ டிரைவர் மீது போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் தங்கள் கட்சி பாணியில் அந்த ஆட்டோ டிரைவருக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தனர்.

இதன்படி ஆட்டோ டிரைவர் வினோத்குமார் ராயை தேடி கண்டுபிடித்த அவர்கள், அவரை கன்னத்தில் சரமாரியாக அறைந்தனர். இந்த வீடியோ காட்சியும் தற்போது வைரலாகி உள்ளது.

நோட்டீஸ்

இதை தொடர்ந்து பாந்திரா- குர்லா காம்ப்ளக்ஸ் போலீசார் ஆட்டோ டிரைவர் வினோத்குமார் ராயை பிடித்து விசாரித்தனர். இருப்பினும் அவரால் தாக்கப்பட்ட வாலிபர் புகார் ஏதும் கொடுக்காததால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில், வினோத்குமார் ராயின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க போக்குவரத்து துறை மந்திரி திவாகர் ராவ்தே பரிந்துரை செய்து உள்ளார்.

மேலும் இது தொடர்பாக வினோத்குமார் ராய்க்கும், அவர் ஓட்டும் ஆட்டோவின் உரிமையாளருக்கும் போக்குவரத்து துறை கமிஷனர் சேகர் சென்னே நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Next Story