கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் மழைநீர் கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 916 குடும்பங்களை சேர்ந்த 2,841 தமிழர்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர். கடந்த 1990-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி தொடங்கப்பட்டது.
முகாமில் வசிக்கும் தமிழர்களின் நலனுக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு சாலைகள் மற்றும் சாலையோரம் மழை நீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டது. மேலும், முகாமின் மையப்பகுதியில் பல்வேறு தெருக்களில் உள்ள கால்வாய்களை இணைக்கும் பெரிய இணைப்பு கால்வாய் உள்ளது. இந்த கால்வாய்க்கு வந்துதான், மற்ற தெருக்களில் உள்ள கால்வாய் நீரானது முகாமை விட்டு வெளியே கடந்து செல்ல வேண்டும். ஆனால் இந்த பெரிய இணைப்பு மழைநீர் கால்வாய் தற்போது கழிவு கால்வாயாக மாறி விட்டது.
முகாமின் மத்தியில் உள்ள இந்த கால்வாயில் தேங்கி உள்ள கழிவுநீர், கொசுக்களை உற்பத்தி செய்யும் புகலிடமாக இருந்து வருவதால் முகாமில் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டு உள்ளது. சிறு குழந்தைகளுடன் வசித்து வரும் முகாம் தமிழர்கள் நோய் தொற்றால் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், முகாமில் உள்ள தெருக்களில் கடந்த 2015-ம் ஆண்டு 78 சோடியம் மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. அவை உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் அனைத்தும் பழுதுபட்டு கிடக்கிறது. இதனையடுத்து முகாமில் தற்போது இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிவது இல்லை. இதனையடுத்து அங்கு வசிப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்தநிலையில், கழிவுநீர் தேங்கியுள்ள மழைநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும், முகாமில் தெரு விளக்குகள் மீண்டும் எரிவதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதே கும்மிடிப்பூண்டி முகாமில் வசித்து வரும் இலங்கை தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story