பால்கரில் ஒரே நாளில் 3 முறை நிலநடுக்கம் குழந்தை பலியான பரிதாபம்


பால்கரில் ஒரே நாளில் 3 முறை நிலநடுக்கம் குழந்தை பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 1 Feb 2019 10:50 PM GMT (Updated: 2019-02-02T04:20:09+05:30)

பால்கரில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 தடவை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

வசாய்,

பால்கரில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். அண்மையில் நிலநடுக்கம் தொடர்பாக மத்தியக்குழு வந்து ஆய்வு நடத்தியது. அதன் பின்னரும் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பதற வைத்தது.

இந்தநிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் பால்கரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று காலை 6.58 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 3.3 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவாகி இருந்தது.

இதைத்தொடர்ந்து காலை 10.13 மணி அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியில் உறைந்து தங்கள் வீடுகளை விட்டு அலறி அடித்தபடி வெளியேறினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது.வீடுகளில் விரிசல்

பின்னர் சிறிது நேரத்தில் சரியாக 10.29 மணி அளவில் மீண்டும் அங்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவாகி இருந்தது.

நேற்று தொடர்ச்சியாக 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சில இடங்களில் உள்ள வீடுகளின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வீதியில் தஞ்சம் அடைந்தனர். மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியே ஓட்டம் பிடித்தது பரிதாபமாக இருந்தது. அலுவலகங்களில் பணியாற்றியவர்கள் வெளியே வந்து பதறியபடி நின்றனர்.

குழந்தை பலி

இதற்கிடையே நிலநடுக்கத்தின் போது ஒரு குடும்பத்தினர் பதறியடித்து கொண்டு வெளியே ஓடி வர முயன்றனர். அப்போது வைபவி என்ற 2 வயது குழந்தை சுவரில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த குழந்தை சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தது.

நில நடுக்கத்துக்கு குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் தொடர் நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

Next Story