அம்பை வாகைபதியில் தை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது 11-ந் தேதி தேரோட்டம்


அம்பை வாகைபதியில் தை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது 11-ந் தேதி தேரோட்டம்
x
தினத்தந்தி 1 Feb 2019 10:30 PM GMT (Updated: 2019-02-02T04:34:56+05:30)

அம்பை வாகைபதியில் தைப்பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 11-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது

அம்பை, 

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள வாகைகுளம் வாகைபதி அய்யா வைகுண்டர் ஆதிநாராயணர் கோவிலில் தைப்பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் அய்யா வைகுண்டருக்கு சிறப்பு பணிவிடைகள் நடந்தது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் அய்யா வழி பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வருகிற 11-ந் தேதி வரை கோவில் முழுநேர நடை திறப்பு மற்றும் சிறப்பு பணிவிடைகளும் நடைபெறும். திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர் வெவ்வேறு வாகனங்களில் காட்சி தருவார். முதல் நாள் கருட வாகனத்திலும், தொடர்ந்து இரவில் தண்டிகை, சிங்கம், அன்னம், சூரியன், நாகம், பல்லக்கு வாகனங்களிலும் அய்யா வைகுண்டர் எழுந்தருள்கிறார்.

8-ம் திருநாளன்று பால்குடம் மற்றும் அன்னதர்மம் நடக்கிறது. பின்னர் இரவில் அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 10-ந் திருநாளன்று காலையில் பால்குடம், சந்தனகுடம் எடுத்தல் மற்றும் கும்பிடு நமஸ்காரம் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவில் இந்திரன் விமானத்தில் அய்யா வைகுண்டர் எழுந்தருள்கிறார்.

11-ம் திருநாளான 11-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று மாலையில் அய்யா வைகுண்டர் தேரோட்டமும், இரவில் ரிஷப வாகனத்தில் அய்யா வைகுண்டர் பவனியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அப்பகுதியை சேர்ந்த அய்யா வழி பக்தர்களும், அன்புக்கொடி மக்களும் செய்து வருகின்றனர். 

Next Story