மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்: தலித், பழங்குடியின மக்களுக்கு விரோதமானது திருமாவளவன் பேட்டி
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு விரோதமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று மாலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட், தேர்தல் அறிக்கை போன்று உள்ளது. 2 எக்டேருக்கும் குறைவான விவசாய நிலங்களை கொண்ட சிறு-குறு விவசாயிகளுக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உதவித்தொகை வழங்குவதாக அறிவித்து உள்ளனர். விவசாயிகளுக்கு ஒரு ஆண்டுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.6 ஆயிரத்தை 3 தவணைகளாக வழங்குவதாக கூறுகின்றனர். ஆனால் நமது நாட்டில் 25 கோடி பேர் எந்த நிலமும் இல்லாத ஏழை தொழிலாளர்களாக உள்ளனர்.
அதேபோன்று 60 வயதான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்குவதாக அறிவித்து உள்ளனர். இதிலும் விவசாய தொழிலாளர்கள் பயன்பெற முடியாது. தனியார் நிறுவனங்களிலும், தொழிற்சங்கங்களில் பணியாற்றுகிறவர்களுமே பயன்பெற முடியும். தெலுங்கானா மாநிலத்தில் ஏற்கனவே சிறு-குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.8 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதனை மத்திய அரசு காப்பி அடித்துள்ளது.
அதேபோன்று வருமான வரி உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளனர். இதில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றவர்களே பயன்பெற முடியும். கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தலித், பழங்குடியினர் நலனுக்காக 10 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதனை பா.ஜ.க. அரசு 7 சதவீதமாக குறைத்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், தனிநபர் குறைந்தபட்ச வருமானத்துக்கு உத்தரவாதம் அளிப்பதாக உறுதி அளித்தார். அதில் வயது வரம்பு கிடையாது. மேலும் நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கும் வருமானத்துக்கு உத்தரவாதம் தரப்படுகிறது.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், நிலம் இல்லாத விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் துரோகம் விளைவித்துள்ளது. இது தலித், பழங்குடியின மக்களுக்கு விரோதமான பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருமாவளவன் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது;-
உத்தரபிரதேச மாநிலத்தில் காந்தியின் உருவ படத்தை இந்து மகாசபையினர் துப்பாக்கியால் சுட்டு தீ வைத்து கொளுத்தி உள்ளனர். இதற்கு மோடி அரசு தான் பொறுப்பு. அவர்கள் ஜனநாயகத்தை கேவலப்படுத்தி உள்ளனர். அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 4-ந்தேதி சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை தமிழக அரசு அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் மூலம் நசுக்கி உள்ளது. இதற்கு எதிராக மக்கள் போராட வேண்டும்.
தமிழக அரசு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலை நடத்த விரும்புகிறது. அதன்படி தான் தேர்தல் ஆணையமும் செயல்படுகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்களை நசுக்குவதிலேயே காவல்துறை குறியாக உள்ளது. இதனை நாங்கள் கண்டிக்கிறோம். பொதுமக்களிடம் காவல்துறையினரின் அணுகுமுறை அநாகரீகமாக உள்ளது. இதனால் தான் தற்கொலை போன்ற சம்பவங்கள் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story