வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண் ‘திடீர்’ சாவு தவறான சிகிச்சையே காரணம் என கூறி உறவினர்கள் வாக்குவாதம்
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண் திடீரென இறந்தார். டாக்டர்களின் தவறான சிகிச்சையே அவரது சாவுக்கு காரணம் என கூறி நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அடுக்கம்பாறை,
ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரத்தை சேர்ந்தவர் கலீல். டிரைவராக உள்ளார். இவரது மனைவி ஷம்வா (வயது 31) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு பிரசவவலி ஏற்பட்டதையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஷம்வாவை மேல்விஷாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 30-ந் தேதி அனுமதித்தனர். அங்கு ஷம்வாவை பரிசோதனை செய்தபோது சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பில்லை என்பதால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் காலை சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
வழக்கமாக குழந்தையின் எடை 2½ கிலோதான் இருக்க வேண்டும். ஆனால் ஷம்வாவுக்கு பிறந்த குழந்தை 3.2 கிலோ எடை இருந்தது. இந்த நிலையில் ஷம்வாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்தனர்.
அப்போது ரத்தம் உறையும் தன்மையில் குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு 28 யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டது. செயற்கை சுவாசமும் ஏற்படுத்தி டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் திடீரென இறந்து விட்டார். குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இதனால் அதிர்ச்சியடைந்தனர்.
ஷம்வாவின் சாவுக்கு டாக்டர்களின் தவறான சிகிச்சையே காரணம் என்றும், எனவே சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் மகப்பேறு சிகிச்சை பிரிவு நுழைவு வாயில் முன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் ஷம்வாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
பிரசவத்தின்போது பெண் திடீரென இறந்த சம்பவத்தை தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story