கால்நடை துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்
கால்நடை துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கோபியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார்.
கடத்தூர்,
ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நாட்டுக்கோழிக்குஞ்சுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 77 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 50 நாட்டுக்கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட உள்ளது. தற்போது வரை 12 மாவட்டங்களில் 15 லட்சம் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் 20 லட்சம் குஞ்சுகள் 10–ந் தேதிக்குள் வழங்கப்படும். இதுவரை 10 லட்சம் பெண்களுக்கு தலா 4 வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளது. அதே போல, ஒவ்வொரு மாவட்டத்திலும் 400 பயனாளிகளுக்கு தலா ரூ.40 ஆயிரத்து 250 மதிப்பில் கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நவீன கருவிகளை உள்ளடக்கிய அம்மா ஆம்புலன்சுகள் கால்நடைகளுக்காக வழங்கப்பட உள்ளது. இதில் வீட்டு பிராணிகள் முதல் ஆடு, மாடுகள் நோய்வாய்பட்டால், வீடுகளுக்கே வந்து கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள். இதற்காக இலவச தொலை பேசி எண் வழங்கப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள ஆய்வாளர்கள் பணியிடங்கள் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பு நிரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது அ.தி.மு.க. மாநில வர்த்தக அணிச் செயலாளர் சிந்துரவிச்சந்திரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பிசுப்பிரமணியம், கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் காளியப்பன் உள்பட பலர் இருந்தனர்.
தொடர்ந்து கோபி நகராட்சி பகுதியில் வீடு, வீடாகச் சென்று குப்பைகளை எடுப்பதற்காக பேட்டரி பொருத்திய 3 சக்கர வாகனங்களை அமைச்சர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். விழாவில் ஆணையாளர் சுதா, பொறியாளர் பார்த்தீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பவானியில் நடைபெற்ற நாட்டுக்கோழிக்குஞ்சுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஈரோடு மாவட்டத்தில் மயில்களால் பயிர்கள் சேதமடைகின்றன. இதைத்தடுக்க வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் மலைப்பகுதியில் விவசாய நிலங்களுக்குள் யானை உள்ளிட்ட விலங்குகள் புகுவதை தடுக்க, வனப்பகுதியிலேயே விலங்குகளுக்கு தண்ணீர் வசதி செய்துகொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையை முற்றிலும் தீர்க்க முதல்–அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசென்று தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.