அமராவதி அணையின் நீர்மட்டம் 25 அடியாக சரிவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்


அமராவதி அணையின் நீர்மட்டம் 25 அடியாக சரிவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 2 Feb 2019 10:45 PM GMT (Updated: 2019-02-03T01:34:40+05:30)

அமராவதி அணையின் நீர்மட்டம் 25 அடியாக சரிந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

தளி,

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது. அதனை அடிப்படையாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 55ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகின்றன.

அதன்படி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றிலும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுப்புற கிராமமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள சிற்றாறுகள் மூலமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதையடுத்து அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக குருவை நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அதை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்கள் முழு விளைச்சலை எட்டியதால் அறுவடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் மழைப்பொழிவின் தாக்கம் குறைந்து விட்டதால் கடந்த சில மாதங்களாக மேற்குதொடர்ச்சி மலைகளில் மீண்டும் வறட்சி தலை தூக்கி உள்ளது. இதன் காரணமாக அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களான பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் அதன் துணை ஆறுகளிலும் நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.

இதனால் அணைக்கு குறைந்தளவே நீர்வரத்து வந்து கொண்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாக்கொண்ட குடிநீர் திட்டங்களில் ஓரளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் தற்போதைய குடிநீர் தேவை பூர்த்தி அடைந்து வருகிறது.

ஆனாலும் அமராவதி அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால் குறைவான நீரை கொண்டு கோடைகால குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் குடிநீர் திட்டங்களை நீர்ஆதாரமாக கொண்டுள்ள சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். நேற்றைய நிலவரப்படி அணையில் 25.03 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

Next Story