பட்ஜெட்டை பார்த்து எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளன மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி


பட்ஜெட்டை பார்த்து எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளன மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி
x
தினத்தந்தி 2 Feb 2019 11:30 PM GMT (Updated: 2 Feb 2019 8:23 PM GMT)

மத்திய அரசின் பட்ஜெட் பார்த்து எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளன என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

புதுச்சேரி,

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று புதுவை வந்தார். அவர் அரவிந்தர் ஆசிரம பள்ளி, அரவிந்தர் ஆசிரமம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோவில் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆரோவில் உதய 50-வது ஆண்டையொட்டி நான் வந்துள்ளேன். இதற்காக நான் முன்பே வர திட்டமிட்டிருந்தேன். ஆனால் நாடாளுமன்ற அலுவல்கள் இருந்ததால் வர முடியவில்லை.

இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டை பார்த்து எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளன. இந்த பட்ஜெட் தாக்கலில் விதிமுறை மீறல் ஏதும் இல்லை. மக்கள் நலனை கருத்தில்கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் இது.

விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கும் திட்டம் ஏற்கனவே உள்ளது என்றால் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அதற்கு மேல் கொடுக்கலாம். மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவதே அரசின் கடமை.

ரபேல் விவகாரம் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. ரபேல் தொடர்பாக குற்றஞ்சாட்டுபவர்கள் திரும்ப திரும்ப பொய்யையே கூறுகின்றனர். தூங்குகிறவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

அவரிடம், நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி அமையுமா? என்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த மத்திய மந்திரி, அதுபற்றி கூறும் அதிகாரம் தனக்கு இல்லை என்றார். முன்னதாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை முதல்-அமைச்சர் நாராயணசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

Next Story