சக்தி இயக்கத்தில் சேர காலக்கெடு நீட்டிப்பு அமைச்சர் நமச்சிவாயம் தகவல்


சக்தி இயக்கத்தில் சேர காலக்கெடு நீட்டிப்பு அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
x
தினத்தந்தி 3 Feb 2019 4:00 AM IST (Updated: 3 Feb 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

சக்தி இயக்கத்தில் சேர காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனின் கருத்துகளையும், எண்ணங்களையும், அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறியும்வண்ணம் தலைவர் ராகுல்காந்தியால் தொடங்கப்பட்ட சக்தி என்ற மாபெரும் மக்கள் இயக்கம் கடந்த 20–ந்தேதி புதுச்சேரியிலும் தொடங்கப்பட்டது.

சக்தி இயக்கத்தில் காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆர்வத்துடன் இணைந்து வருகிறார்கள். சக்தி இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொள்ள கடந்த 31–ந்தேதி வரை அவகாசம் தரப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக அளவில் சக்தி இயக்கத்தில் இணைத்துக்கொள்ள ஏதுவாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை வருகிற 15–ந்தேதி வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளது.

எனவே காங்கிரஸ் பேரியக்க மாநில நிர்வாகிகளும், மாவட்ட, வட்டார தலைவர்களும் அனைத்து பிரிவுகளின் தலைவர்களும், நிர்வாகிகளும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெருவாரியான தொண்டர்களையும், அனுதாபிகளையும் சக்தி இயக்கத்தில் இணைப்பதற்கு அயராது பாடுபடுமாறு புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.


Next Story