ஆட்டுக்கறி கேட்டு 2 பேரை தாக்கிய விவகாரம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்


ஆட்டுக்கறி கேட்டு 2 பேரை தாக்கிய விவகாரம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
x
தினத்தந்தி 3 Feb 2019 3:00 AM IST (Updated: 3 Feb 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டுக்கறி கேட்டு 2 பேரை தாக்கிய விவகாரம் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

சேலம், 

சேலம் அருகே உள்ள கம்மாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூக்குத்தி கவுண்டர் (வயது 75). இவர் சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையம் அருகே இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த மாதம் இலவசமாக 2 கிலோ ஆட்டுக் கறியை போலீசார் கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு அவர், ஏற்கனவே வாங்கிய ஆட்டுக்கறிக்கு பணம் கொடுக்கவில்லையே என்று கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்து அவரை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கி உள்ளனர். இதையறிந்த அவருடைய மகன் விஜயகுமார் போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரித்தார். அவரையும் போலீசார் கடுமையாக தாக்கினர். பின்னர் காயமடைந்த அவர்கள் இருவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இதைத்தொடர்ந்து இலவசமாக ஆட்டுக்கறிகேட்டு முதியவர், அவருடைய மகன் தாக்கப்பட்டது தொடர்பான புகாருக்கு உள்ளான சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் இது தொடர்பாக மூக்குத்தி கவுண்டரின் மனைவி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில், போலீசார் தாக்கியதில் எனது மகன் விஜயகுமாரின் காதுசவ்வில் ஓட்டை விழுந்துவிட்டதாக டாக்டர்கள் கூறுகின்றனர். போலீசார் தாக்கியதை தொடர்ந்து அவனுக்கு காது கேட்கவில்லை. எனவே கணவர் மற்றும் மகனை தாக்கிய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியத்தை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story