கடைகளை அகற்ற எதிர்ப்பு குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை


கடைகளை அகற்ற எதிர்ப்பு குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 3 Feb 2019 2:23 AM IST (Updated: 3 Feb 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர்புரத்தில் கடைகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டதால், அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்.

அடையாறு,

சென்னை கோட்டூர்புரம் மேம்பாலம் அருகே உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சுமார் 200 கடைகள் உள்ளன. இந்த பகுதியில் சில குடியிருப்புகள் ஏற்கனவே அகற்றப்பட்ட நிலையில், முதல் கட்டமாக அதன் அருகில் உள்ள 25 கடைகளையும் அகற்றிவிட்டு அந்த பகுதியில் புதிய குடியிருப்புகள் கட்ட திட்டமிட்ட குடிசை மாற்று வாரியம், அந்த கடைக்காரர்களுக்கு இடத்தை காலி செய்யும்படி ஏற்கனவே நோட்டீஸ் வழங்கியது.

இந்தநிலையில் நேற்று காலை சுமார் 50 போலீசார் பாதுகாப்புடன் அங்கு வந்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், கடைகளை அகற்ற முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கடைக்காரர்கள் தங்கள் குடும்பத்துடன் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் திரும்பி சென்றனர்

அப்போது அவர்கள், “நாங்கள் இந்த பகுதியில் 45 வருடமாக கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளதால் தங்கள் கடைகளை அகற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும்” எனக்கோரி சுமார் 2 மணி நேரமாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வரும் திங்கட்கிழமை குடிசை மாற்று வாரிய உயர் அதிகாரிகளை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் தெரிவித்த அதிகாரிகள், அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

Next Story