தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் கடல் சறுக்கு சாகச விளையாட்டு போட்டி


தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் கடல் சறுக்கு சாகச விளையாட்டு போட்டி
x
தினத்தந்தி 3 Feb 2019 3:45 AM IST (Updated: 3 Feb 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் கடல் சறுக்கு சாகச விளையாட்டு போட்டிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்காவில் தனியார் நிறுவனத்தின் மூலம் கடல் சறுக்கு சாகச விளையாட்டு போட்டிகள் நேற்று காலையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், நெல்லை-தூத்துக்குடி ஆவின் தலைவர் என்.சின்னத்துரை உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதில் ஒன்றான புதிய நவீனமயமாக்கப்பட்ட பஸ் நிலையம் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. புதிதாக வணிகவளாகம் அமைக்கப்பட உள்ளது.

அதேபோல் மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களை கருத்தில் கொண்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தனியார் பங்களிப்புடன் கடல் சறுக்கு விளையாட்டு சாகச போட்டிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் ஜெட்ஸ்கி, வின்ட் சபரிங், பனானா ரைட், பம்ப் ரைட், ஸ்டேன்ட் அப் போர்டு ஆகிய கடல் சாகச விளையாட்டுகள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த போட்டிகள் அனைத்து பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டு உள்ளது. இந்த விளையாட்டுகளால் விரைவில் தூத்துக்குடி வெளிமாவட்ட சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமையும். இந்த சாகச விளையாட்டுகள் தினமும் நடத்தப்பட உள்ளது. அடுத்த கட்டமாக தூத்துக்குடியை சுற்றி அமைந்து உள்ள பல தீவுகளுக்கு படகு சவாரி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது தொடங்கப்பட்டு உள்ள இந்த சாகச விளையாட்டு போட்டியானது எந்த நேரத்தில் நடத்துவது, எவ்வளவு கட்டணம் வசூல் செய்வது குறித்து பொதுமக்களிடமே கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். கண்டிப்பாக பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் கட்டணம் இருக்கும்.

தூத்துக்குடி விமான நிலையம் இந்த ஆண்டுக்குள் பன்னாட்டு விமான நிலையம் என்ற அந்தஸ்தை பெறும். அப்படி அந்தஸ்தை பெறும் போது சுற்றுலா பயணிகள் வெளிநாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு வர வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் கண்டறியப்பட்டு பராமரிக்கப்படும். அதிக அளவில் சுற்றுலா தலங்கள் கொண்ட மாவட்டமாக தூத்துக்குடி மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி பொறியாளர் ராமச்சந்திரன், சுற்றுலா அலுவலர் கோவிந்தராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story