தூத்துக்குடியில் ஆட்சி மொழி பயிலரங்கம் நிறைவு
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நிறைவு விழா நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அரசு அலுவலர்களுக்கான ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு நாள் விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். அவர் ஆட்சி மொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய தூத்துக்குடி அரசு இசைப்பள்ளிக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-
தமிழக அரசு தமிழ் மொழியை வளர்ப்பதற்காக ஊர் பெயர்களை தமிழ் பெயர்களாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ் வளர்ச்சி துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் அரசு அலுவலர்களுக்கு ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இந்த கருத்தரங்கத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் துணை இயக்குனர்கள், தமிழ் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மொழி பெயர்ப்பு, கலைச்சொல்லாக்கம், மொழி பயிற்சி, தமிழில் அலுவலக குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரிப்பதற்கும் பயிற்சிகள் அளித்தனர்.
இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்கள், தமிழ் வல்லுனர்கள் வழங்கிய கருத்துக்களை ஏற்று அரசு அலுவலர்கள் அலுவலகத்தில் பின்பற்ற வேண்டும்.
அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களிடம் கோப்புகளை தமிழ் மொழியில் பராமரிக்க அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர்கள் சம்சுதீன் (தூத்துக்குடி), அன்புச்செழியன் (கோவை), சிவசாமி (திருச்சி), மேனாள் அகர முதலித் திட்ட இயக்குனர் செழியன், தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் மல்லிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story