திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால் 2 நுண்ணீர் பாசன நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து கலெக்டர் நடவடிக்கை


திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால் 2 நுண்ணீர் பாசன நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Feb 2019 3:15 AM IST (Updated: 3 Feb 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

நுண்ணீர் பாசன திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால் 2 நுண்ணீர் பாசன நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்து கலெக்டர் டி.ஜி.வினய் நடவடிக்கை எடுத்துள்ளார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகளின் நலனுக்காக நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக 41 நுண்ணீர் பாசன நிறுவனங்களுக்கு அரசு சார்பில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக வேளாண் உற்பத்தியாளர் மற்றும் முதன்மை செயலரின் தலைமையில் 2 வாரங்களுக்கு ஒருமுறை ஆய்வு கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ‘எவர்கிரீன் இரிகேசன்’, ‘பூர்மா பிளாஸ்ட் பிரைவேட் லிமிடெட்’ ஆகிய 2 நுண்ணீர் பாசன நிறுவனங்கள் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு எந்தவித உதவியும் செய்யாமல் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து அந்த நிறுவனங்களிடம் நுண்ணீர் பாசனம் அமைக்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என ஆய்வு கூட்டம் நடத்தப்பட்ட போது அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் அதன் பின்னரும் அந்த 2 நுண்ணீர் பாசன நிறுவனங்களும் குறிப்பிடும்படி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து மாநில அளவில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் குழுவிடம் இந்த 2 நுண்ணீர் பாசன நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அனுமதி கோரப்பட்டது.

பின்னர் அந்த குழுவின் அனுமதியுடன் 2 நுண்ணீர் பாசன நிறுவனங்களின் அங்கீகாரத்தையும் ரத்து செய்து கலெக்டர் டி.ஜி.வினய் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 2 நிறுவனங்களிடம் விவசாயிகள் யாரும் நுண்ணீர் பாசனம் அமைப்பதற்காக அணுக வேண்டாம் என்றார்.

Next Story