மேற்கு ஆப்பிரிக்காவில் கைதானவரை நாடு கடத்த தீவிரம் மும்பையை கலக்கிய தாதா பற்றி திடுக்கிடும் தகவல்


மேற்கு ஆப்பிரிக்காவில் கைதானவரை நாடு கடத்த தீவிரம் மும்பையை கலக்கிய தாதா பற்றி திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 3 Feb 2019 4:13 AM IST (Updated: 3 Feb 2019 4:13 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு ஆப்பிரிக்கா நாட்டில் கைதான மும்பை தாதா ரவி புஜாரி நாடு கடத்தி கொண்டு வரப்படுகிறார். இவர் குண்டுவெடிப்பு கைதிகள், வக்கீலை கொன்றவர் என்பது போன்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

மும்பையை கலக்கிய பிரபல தாதா ரவி புஜாரி. இவர் கட்டுமான அதிபர்கள், சினிமா பிரபலங்களை மிரட்டி பணம் பறித்து வந்தார். வெளிநாட்டில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தபோதிலும், அவரது கூட்டாளிகள் அவ்வப்போது மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் நாடு முழுவதும் ஈடுபட்டு வந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தி சினிமா இயக்குனர் மகேஷ் பட்டுக்கு தாதா ரவி புஜாரி பெயரில் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் மும்பை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மகேஷ் பட்டை கொல்ல முயன்றதாக ரவி புஜாரி கூட்டாளிகள் சிலரை போலீசார் கைது செய்திருந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்காவில் கைது

இந்த நிலையில் ரவி புஜாரிக்கு பக்கபலமாக இருந்து வந்த கூட்டாளிகள் வில்லியம் ரோட்ரிக்ஸ், ஆகாஷ் ஷெட்டி ஆகியோரை சமீபத்தில் மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து திடீர் திருப்பமாக தாதா ரவி புஜாரி மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் பிடிபட்டு உள்ளார். அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு வந்த போது அவரை அந்த நாட்டு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவரை நாடு கடத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் இந்தியா கொண்டு வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகத்தை சேர்ந்தவர்

செனகல் நாட்டில் கைதான ரவி புஜாரி கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் இணைந்து சில காலம் செயல்பட்டார்.

பின்னர் மும்பையை கலக்கிய தாதாவான சோட்டா ராஜனுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டு வந்தார். அவர் தான் ரவி புஜாரியை வளர்த்து விட்டுள்ளார். பின்னாட்களில் சோட்டா ராஜனிடம் இருந்து பிரிந்து தன்னையும் தனி தாதாவாக அறிவித்து கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். மேலும் தன்னை இந்துக்களின் தாதாவாகவும் காட்டிக்கொண்டார்.

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த சில குற்றவாளிகளை ரவி புஜாரி கும்பல் கொலை செய்ததாக கூறப்பட்டது.

வக்கீல் கொலை

மும்பையில் பயங்கரவாத தொடர்பு குற்றவாளிகளுக்காக கோர்ட்டில் ஆஜரான வக்கீல் சாகித் ஆஸ்மி 2010-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு முன்பு ரவி புஜாரியின் கூட்டாளிகளிடம் இருந்து அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் வக்கீல் கொலையில் ரவிபுஜாரிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிழல் உலக தாதாவாக செயல்பட்டு வந்த ரவி புஜாரி மேற்கு ஆப்பிரிக்காவின் செனகலில் பிடிபட்டு உள்ளார்.

ரவி புஜாரியின் தொழில் குருவான தாதா சோட்டா ராஜன் கடந்த 2015-ம் ஆண்டு இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு, பின்னர் நாடு கடத்தி கொண்டு வரப்பட்டார். அவர் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story