கோவையில் மர்ம காய்ச்சல் பரவுகிறது தண்ணீரை காய்ச்சி குடிக்க டாக்டர்கள் அறிவுரை
பருவநிலை மாற்றம் காரணமாக கோவையில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. எனவே தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் தற்போது இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகளவு உள்ளது. இதுதவிர கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பனி மற்றும் வெயில் மாறி மாறி வருவதால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கோவை தொண்டாமுத்தூர், மதுக்கரை, அரிசிபாளையம், போத்தனூர், பேரூர், சிங்காநல்லூர், குறிச்சி, காந்திபுரம், புதுசித்தாபுதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இந்த காய்ச்சலில் இருந்து தப்பிப்பது குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பருவநிலை மாற்றம் காரணமாக பொதுமக்களுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் ஆரம்பத்தில் தலைவலி, வயிற்றுப்போக்கு, லேசான காய்ச்சல், கை, கால்களின் மூட்டுகளில் வலி ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், அதிகாரிகள் ஆய்வு நடத்தி, ஆங்காங்கே கிருமி நாசினி மருந்து மற்றும் கொசு மருந்து தெளித்து வருகின்றனர். இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தை பரிசோதனை செய்தபோது டெங்கு, பன்றிக்காய்ச்சல், மலேரியா போன்ற காய்ச்சலுக்கான அறிகுறி இல்லை. மர்ம காய்ச்சல் போல் உள்ளது.
இந்த காய்ச்சல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை எளிதில் தாக்கும். இதில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் நல்ல சத்தான உணவு மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். பொதுமக்கள் முடிந்தவரை ஐஸ்கிரீம் உள்ளிட்ட குளிரூட்டப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.
மேலும் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். ஈக்கள், கொசுக்கள் அமராத வகையில் உணவுகளை சமைத்த உடனே மூடிவைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story