பால்கர் மாவட்டத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் 200 முகாம்களில் பொதுமக்கள் தஞ்சம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை


பால்கர் மாவட்டத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் 200 முகாம்களில் பொதுமக்கள் தஞ்சம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை
x
தினத்தந்தி 3 Feb 2019 4:34 AM IST (Updated: 3 Feb 2019 4:34 AM IST)
t-max-icont-min-icon

பால்கர் மாவட்டத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து 200 தற்காலிக முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

வசாய்,

பால்கர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 6 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பால்கர் பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர். பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் கூடாரங்கள் அமைத்து தஞ்சம் அடைந்து வருகின்றனர். நேற்று முன் தினம் நிலநடுக்கத்தின் போது வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த போது அப்பகுதியை சேர்ந்த 2 வயது குழந்தை ஒன்று சுவரில் மோதி உயிரிழந்தது.

நிலநடுக்கம் காரணமாக பால்கர் மாவட்ட மக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.

தற்காலிக முகாம்கள்

இதுபற்றி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் நார்னாவாரே கூறுகையில், ‘‘பால்கர் மாவட்டத்தை சேர்ந்த 12 கிராமங்களில் 42 இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதை தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் தேசிய மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். பால்கர் மாவட்டத்தில் 200 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

பொதுமக்களை வீடுகளில் இருக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம். முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

தேசிய பேரிடர் மீட்பு படை

இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினரை உடனடியாக பால்கருக்கு அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று புனேயில் இருந்து 36 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தகானுவில் உள்ள தானுடல்வாடி கிராமத்தில் வந்து இறங்கினர். அவர்களுடன் மீட்பு உபகரண பொருட்கள், மின்ஜெனரேட்டர்கள், கட்டர்கள், தீத்தடுப்பு சாதனங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்ற அவசர தேவைக்கான உபகரணங்கள் லாரியில் கொண்டு வரப்பட்டது.

புவியியல் ஆராய்ச்சி வல்லுனர்கள்

இதைத்தவிர புனேயில் இருந்து வானிலை ஆய்வு மைய வல்லுனர்கள் மற்றும் ஐதராபாத்தில் இருந்து தேசிய புவியியல் ஆராய்ச்சி வல்லுனர்களும் பால்கர் வந்து உள்ளனர். இவர்கள் இணைந்து நிலநடுக்கம் தொடர்பான ஆய்வுகள் நடத்தி கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பால்கர், தகானு, தலசேரி பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம் தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நிலநடுக்கத்தால் விரிசல் ஏற்பட்ட சாலைகள், பாலங்களை ஆய்வு செய்து, அதனை சரிசெய்து வருகின்றனர். நிலநடுக்கத்தால் கிராம வாசிகள் பீதியில் இருப்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

Next Story