ஒரு பொம்மையும்.. கசப்பான உண்மையும்..


ஒரு பொம்மையும்.. கசப்பான உண்மையும்..
x
தினத்தந்தி 3 Feb 2019 2:53 PM IST (Updated: 3 Feb 2019 2:53 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் ஒரு விநோதமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

மெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் ஒரு விநோதமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அந்த பகுதியில் வசிக்கும் சோனா ச்சோ என்ற சீன பெண்ணின் மகனான லூக்கா அந்த வினோதத்தை நிகழ்த்தியிருக்கிறான்.

20 மாத குழந்தையான லூக்கா, கடை வீதிகளில் பார்க்கும் விளையாட்டு பொருட்களை எல்லாம் அடம்பிடித்து வாங்கிவிடுவான். அதனால் வேறுவழியின்றி சோனாவும், மகனுக்கு விளையாட்டு பொருட்களை வாங்கிக்கொடுப்பார். அந்தவகையில் சமீபத்தில் கதை சொல்லும் மர பொம்மை ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறார். அவர் பொம்மையை மட்டும் வாங்கவில்லை, வம்பையும் சேர்த்து விலைக்கு வாங்கியிருக்கிறார் என்பது, பின்னர்தான் அவருக்கு புரிந்திருக்கிறது. அதுபற்றி சோனாவே விளக்குகிறார்.

‘‘லூக்காவிற்கு இரண்டு வயது நெருங்குவதால், அவனது அறிவை மேம்படுத்தும் வகையிலான பொம்மைகளை வாங்கி பரிசளிக்க ஆரம்பித்தேன். அப்படிதான் இந்த கதை சொல்லும் மர பெட்டி பொம்மையையும் வாங்கினேன். இதன் நான்கு பக்கங்களிலும் நான்கு கதைகள் சித்திரமாக வரையப்பட்டிருக்கிறது. கூடவே கதைக்கு ஏற்ப சிறுசிறு பொம்மைகளை நகர்த்தி விளையாடும் வசதிகளும் அதில் இடம்பெற்றிருக்கிறது.

என் மகன் நான் சொல்லும் கதைகளை கேட்டு, அதற்கேற்ப பொம்மைகளை நகர்த்துவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவனது செயல்பாடுகள் என்னை ஏமாற்றமடைய வைத்துவிட்டது. பெட்டியில் இருக்கும் கதைகளை அவனிடம் பொறுமையாக சொல்ல ஆரம்பித்தேன். கதையில் ‘குரங்கு ஒன்று மரம் ஏறுகிறது’ என்றவுடன் லூக்காவும் அருகில் இருந்த சோபாவில் ஏறினான். குரங்கு இறங்குகிறது என்றேன், அவனும் சோபாவில் இருந்து இறங்கினான். இப்படி கதையில் வரும் கதாபாத்திரங்களை போன்று அவனும் நடக்க ஆரம்பித்துவிட்டான்.

ஒரு கட்டத்தில் குரங்கு ஒன்று குகைக்குள் மாட்டிக்கொள்ளும். அதை நான் சொன்னதும், அவன் அந்த சின்ன மரப்பெட்டியை குகையாக நினைத்துக்கொண்டு, அதனுள் அமர்ந்துவிட்டான். அது மிகவும் சிறிய மர பெட்டி என்பதால் அவனால் வெளியே வர முடியவில்லை’’ என்றவர், மகனை மீட்க, போலீசாரை நாடியிருக்கிறார். சிறுவனுக்கு ஆபத்து என்ற செய்தி கேட்டு உஷாரான நியூ ஜெர்சி போலீசார் படையோடு சோனாவின் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். சம்பவத்தை நேரில் பார்த்ததும்தான், அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். லூக்காவை மரப்பெட்டியில் இருந்து பத்திரமாக மீட்டெடுத்திருக்கிறார்கள்.

‘‘வயதிற்கு தகுந்த விளையாட்டு பொருட்களை மட்டுமே குழந்தைகளுக்கு பரிசளிக்க வேண்டும் என்பதை லூக்காவின் மூலம் இந்த உலகம் புரிந்திருக்கும். சிறு பிள்ளைகளை அவர்கள் வழியிலேயே விளையாட விடுங்கள். இல்லையேல் இதுபோன்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும்’’ என்று அறிவுரை கூறிய போலீசார் அந்த மரப்பெட்டியை வீட்டின் அலமாரியில் வைக்குமாறு கூறிவிட்டு கிளம்பியிருக்கிறார்கள்.

Next Story