2-ம் உலக கொங்கு தமிழர் மாநாடு: பார்வையாளர்களை கவர்ந்த நாட்டு மாடுகள் கண்காட்சி


2-ம் உலக கொங்கு தமிழர் மாநாடு: பார்வையாளர்களை கவர்ந்த நாட்டு மாடுகள் கண்காட்சி
x
தினத்தந்தி 4 Feb 2019 4:15 AM IST (Updated: 3 Feb 2019 11:38 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் நேற்று நடந்த 2-ம் உலக கொங்கு தமிழர் மாநாட்டில் நாட்டு மாடுகள் கண்காட்சி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

நாமக்கல், 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் நேற்று நாமக்கல் அருகே உள்ள பொம்மைகுட்டைமேட்டில் 2-ம் உலக கொங்கு தமிழர் மாநாடு நடைபெற்றது. இதையொட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மாநாட்டு திடலில் கொடி ஏற்றி வைத்து நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

முன்னதாக கருங்கல் பாளையத்தில் இருந்து திரளான பெண்கள் முளைப்பாரிகளுடன் ஊர்வலமாக மாநாட்டு திடலுக்கு வந்தனர்.

அதைதொடர்ந்து 108 பசுக்களுடன் கோமாதா பூஜை நடைபெற்றது. ஆதீனங்கள் இந்த பூஜையை நடத்தி அருளாசி வழங்கி பேசினர். இதையடுத்து கொங்கு பண்பாட்டு மையம் சார்பில் ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற நடனம், கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கலை நிகழ்ச்சிகளின் நடுவே அவ்வப்போது கட்சியின் வெளிநாடுவாழ் நிர்வாகிகள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பேசினர்.

இதையொட்டி 110 அரங்குகளுடன் விவசாய கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதில் விவசாயத்திற்கு தேவையான நவீன கருவிகள் இடம் பெற்று இருந்தன.

மாநாட்டையொட்டி நாட்டு மாடுகள் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கிர், சாகிவால், காங்கேயம் மயிலை, கார் பார்க்கர், காங்கிர், ராத்தி உள்பட 18 வகையான சுமார் 200 நாட்டு மாடுகள் இடம் பெற்று இருந்தன. இவற்றை மாநாட்டுக்கு வந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இந்த மாடுகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

மேலும் மாநாட்டு திடல் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் கொங்குநாட்டை சேர்ந்த சுமார் 150 டாக்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை அளித்தனர்.

இதேபோல் மாநாட்டையொட்டி பழைய வாகனங்கள் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 1957-ம் ஆண்டு வெளிவந்த புல்லட், ஜாவா, மொபட் மற்றும் ஸ்கூட்டர்கள் இடம் பெற்று இருந்தன. இவற்றையும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இந்த கண்காட்சியில் பழைய ஜீப், மாட்டுவண்டி போன்றவையும் இடம் பெற்று இருந்தன.

இதேபோல் பண்ருட்டியை சேர்ந்த கவிதை கணேசன் என்பவர் 650 வகையான பாரம்பரிய விதைகளை கண்காட்சிக்கு வைத்து இருந்தார். இதில் 450 வகையான நெல் ரகங்கள் மட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கண்காட்சியில் முன்னோர்கள் பயன்படுத்திய இரும்பு பெட்டிகள், குவளைகள் என பல்வேறு பழங்கால பொருட்களும் இடம் பெற்று இருந்தன. இவற்றையும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

மாநாட்டு திடலில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. மாநாட்டு திடலை சுற்றிலும் பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. மாநாட்டிற்கு வந்த அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மாநாட்டு மேடையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஆங்காங்கே அகன்ற திரையில் ஒளிபரப்பினர். இதையும் ஆங்காங்கே நின்ற தொண்டர்கள் பார்வையிட்டனர். காலை முதல் மாலை வரை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் தொண்டர்கள் வந்தவண்ணம் இருந்தனர்.

இந்த மாநாட்டில் கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் தலைவர் தேவராசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் அவை தலைவர் சென்னியப்பன், மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் மாதேஸ்வரன், பூபதி, நதிராஜவேல், சந்திரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, செல்வம், ஆர்.எஸ்.ஆர்.துரை, மாநில நிதிக்குழு தலைவர் சின்ராஜ், மாநாட்டு பொருளாளர் மணி, நாமக்கல் புறநகர் மாவட்ட பொருளாளர் மோகன், மத்திய மண்டல இளைஞர் அணி செயலாளர் செந்தில், மேற்கு மாவட்ட அவை தலைவர் பெரியசாமி, பொருளாளர் தங்கமுத்து, பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் சாமி, குமாரபாளையம் நகர செயலாளர் ரவிச்சந்திரன், பள்ளிபாளையம் நகர செயலாளர் வெங்கடேஷ் உள்பட 26 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story