தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கடத்திய 2 பேர் கைது
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பணம், கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மஞ்சூர்,
தமிழகத்தில் லாட்டரி பரிசு குலுக்கல் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் அரசே லாட்டரி பரிசு குலுக்கலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு லாட்டரி சீட்டுகள் கடத்தி வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் லாட்டரி விற்பனை பரவலாக நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் பகுதி கேரளாவை ஒட்டி அமைந்துள்ளது. மேலும் அது மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள பகுதியாக கருதப்படுகிறது. இதன் காரணமாக தினமும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து மற்றும் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை மஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, சுதாகர் மற்றும் போலீசார் குந்தாபாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தினர். பின்னர் அதில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சையது கபூர்(வயது 53), மஞ்சூரை சேர்ந்த அப்பாஸ் அலி(42) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காரில் சோதனையிட்டனர்.
அப்போது அங்கு 16 லாட்டரி சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.42 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவற்றையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் லாட்டரி சீட்டுகள் குறித்து காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியபோது, விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சையது கபூர், அப்பாஸ் அலி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story