ஓசூர் வனக்கோட்டத்தில் யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க மின் கம்பி வேலிகள்


ஓசூர் வனக்கோட்டத்தில் யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க மின் கம்பி வேலிகள்
x
தினத்தந்தி 4 Feb 2019 3:30 AM IST (Updated: 4 Feb 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் வனக்கோட்டத்தில் யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க மின்கம்பி வேலிகள் அமைக்கப்படுகின்றன.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி, ராயக்கோட்டை ஆகிய வனச்சரகத்தில் மான், சிறுத்தைபுலி, யானைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. இதில் யானைகள் அதிகம் உள்ளன. ஓசூர் அருகேயுள்ள தேன்கனிக்கோட்டை வனப்பகுதி முதல் ஒகேனக்கல் வரையுள்ள வனப்பகுதிகளின் ஒரு பகுதி தமிழக எல்லையாகவும், மற்றொரு பகுதி கர்நாடகா எல்லையாகவும் உள்ளதால் 2 மாநிலங்களுக்கிடையே யானைகள் இடம்பெயர்வது அதிகளவு காணப்படுகிறது.

இந்த யானைகள் கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டாவிலிருந்து தளி, ஜவளகிரி, நொகனுார், தேன்கனிக்கோட்டை வழியாக ஊடேதுர்க்கம், சானமாவு, சூளகிரி வந்த பின் அங்கிருந்து மேலுமலை காப்புகாட்டிற்கு செல்கிறது. வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கிராமத்திற்குள் வராமல் தடுக்க சூரிய மின்வேலி மற்றும் அகழிகள், தடுப்பணைகள், தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வனப்பகுதியை விட்டு அடிக்கடி வெளியேறும் யானைகளை தடுக்க யானை பள்ளம் தோண்டப்பட்டது. இதை தொடர்ந்து ஊருக்குள் யானைகள் அடிக்கடி புகுந்து உயிர்சேதம் மற்றும் பயிர்சேதம் ஏற்படுவதை தடுக்க மின் கம்பி தடுப்பு வேலிகள் அமைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் ஓசூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட அஞ்செட்டி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் வனச்சரக பகுதிகளில் நடந்து வருகின்றன. மின் கம்பி தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகளை மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

ஓசூர் வனப்பகுதி காவேரி வடக்கு உயிரின சரணாலயம் பகுதிகளில் மின் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக ஜவளகிரி பகுதிகளில் கிரானைட் கற்கள், இரும்பு கம்பிகளால் தடுப்பு வேலிகள் அஞ்செட்டி சரகம் குந்துக்கோட்டை கிராமத்தில் கிரானைட் கற்களால் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை தடுக்க இரும்பு, கற்கள் மற்றும் மின்வேலிகள் போடப்பட்டு வருகிறது.

தமிழக அரசு மூலம் புதிய திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் கம்பி வேலிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க முடியும். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்காதவாறு இனி வரும் காலங்களில் யானைகள் ஊருக்குள் வருவது முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும்.

ஓசூர் வனக்கோட்டத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் வெளியேறாமல் இருக்க மொத்தம் 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு வெவ்வேறு வகையான தடுப்பு வேலிகள் அமைக்கும் சூழ்நிலை உள்ளது. இதில் முதல் கட்டமாக இந்த ஆண்டு 25 கிலோ மீட்டர் தொலைவிற்கு மின்வேலிகள் அமைக்கப்படுகிறது. இதே போல பணிகள் மீண்டும் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வனச்சரகர்கள் சீதாராமன், வெங்கடாசலம், ரவி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Next Story